நெடுந்தீவில் கைதான ஏழு இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ் நெடுந்தீவுக் கடற்பரப்பில் புதன்கிழமை (25.03.2026) இரவு கைதான ஏழு இந்தியாவின் தமிழக மீனவர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம்- 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

நேற்று முன்தினம் இரவு நெடுந்தீவுக் கடற்பரப்பில் சுற்றுக் காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் நெடுந்தீவு வடக்குக் கடற்பரப்பில் இரு வேறு சந்தர்ப்பங்களில் ஏழு இந்தியாவின் தமிழகம் இராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்தனர். மீன்பிடிக்குப் பயன்படுத்தப்பட்ட இரு விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.    

கைது செய்யப்பட்ட ஏழு மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டு யாழ்.மாவட்டக் கடற்தொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளின் பின் மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (26.03.2026) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஏழு மீனவர்களையும் அடுத்த மாதம்-09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.