யாழில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த முன்னாள் போராளி

 


யாழ்ப்பாண ஓட்டப் பயிற்சிக் குழுமத்தின் (Jaffna Runners) ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.05.2026) மரதன் ஓட்டப் போட்டியொன்று இடம்பெற்றது. 

யாழ்ப்பாணம் - கோட்டை வாசலில் ஆரம்பித்து பண்ணை - ஊர்காவற்துறை வீதியூடாக இடம்பெற்ற மேற்படி போட்டியில் 5 Km - 10 Km - 15 Km ஆகிய இலக்கு தெரிவுகளுடன் இலங்கை முழுவதிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் என 700 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  


போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ரீ சேர்ட் வழங்கி வைக்கப்பட்டதுடன், முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு வெற்றிச் சால்வை அணிவிக்கப்பட்டு பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்,  ஓட்ட இலக்கை நிறைவு செய்த அனைவரும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தண்ணீர், பழங்கள், பழச்சாறு என்பன வழங்கி வைக்கப்பட்டன. 


15 Km இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்த விஜயலாதன்

குறித்த மரதன் ஓட்டப் போட்டியில் போரின் போது முன்னாள் போராளியான விஜயகுமார் விஜயலாதன் அவர்கள் தனது 15 கிலோமீற்றர் இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்து சிறப்பு பரிசினையும், கௌரவத்தினையும் பெற்றிருந்தார். அவரது மனைவியும், மகனும் ஒருபக்கமாகவும் அவரது நண்பரான ஓவிய ஆசிரியர் கருணாகரன் மற்றைய பக்கமாகவும் தொடர்ந்து வழிகாட்டி வர இவர் நடுவில் ஓடி வந்து மிகுந்த சிரமத்தின் மத்தியில் இலக்கை நிறைவு செய்திருந்தார்.  


இறுதிப் போர்க்காலங்களில் குண்டடிபட்டு தனது இரு கண்பார்வையையும் முற்றாக இழந்த இவர் பல்வேறு உடல்காயங்களோடு ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட  இறுதி நாளன்று முள்ளிவாய்க்காலில் இருந்து தனது அப்பாவுடன் வெளியேறினார்.  

2009 க்குப் பிறகு அறிவிப்பாளர் போட்டி, பேச்சுப் போட்டி, சிறுகதை ஆக்கப் போட்டி, நாடகம், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று 18 க்கும் மேற்பட்ட பதக்கங்களையும், சான்றிதழ்களையும்  பெற்றுள்ளார். 


2015 - 2019 காலப்பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவின் சமூகவியல் துறையில் சிறப்புக் கலைமாணி பட்டத்தையும் பெற்றுக் கொண்ட இவர்   தன்னைப் போல் போரால் பாதிக்கப்பட்டு மீண்டெழும் குடும்பங்களுக்கான கல்வி, வாழ்வாதார உதவிகளையும் செய்து வருவதோடு சமூக சேவைகள் செய்வதிலும் ஆர்வமாக இயங்கி வருகிறார்.


வாராவாரம் ஞாயிறு தோறும் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் காலை 6 மணிக்கு ஓட்டம் ஆரம்பம்  

யாழ்ப்பாண ஓட்டப் பயிற்சிக் குழுமமானது (Jaffna Runners) கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அமெரிக்கா வாழ் ஈழத்தமிழரான 73 வயதான சண். சுந்தரம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 60 வயதுகளின் பின்னராகவே முதியவர்களாகி வீட்டில் முடங்கி விடும் எம்மவர்கள் மத்தியில் மாற்றத்தின் நாயகராக விளங்குகிறார். 


வயதோ ஏனைய காரணிகளோ தடையில்லை, ஓடுவதன் மூலம் உடல்நலத்தை மேம்படுத்த முடியும் என்கிற அடிப்படையிலும் எம்மக்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலேயே இதனை ஆரம்பித்ததாக கூறுகிறார் சண். சுந்தரம் அவர்கள். 

வாராவாரம் ஒவ்வொரு ஞாயிறும் காலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் - துரையப்பா விளையாட்டரங்கில் காலை உடற்பயிற்சியுடன் 5 KM ஓட்டமும்  இடம்பெற்று வருகின்றது. யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஒரு சமூக ஆர்வலரும் திறமையான ஓவியருமாவார். கடந்த மாதம் 73 ஆவது வயதில் டோக்கியோவில் தனது ஆறாவது சர்வதேச மரதன் ஓட்டத்தை நிறைவு செய்தவர். தவிர உலகின் பல்வேறு நகரங்களிலும் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்.   


குறித்த மரதன் ஓட்டப் போட்டிகளுக்கு ஏற்கனவே நடைப்பயிற்சி, ஓட்டம் தொடர்பில்  தொடர்ந்து விழிப்புணர்வூட்டி வரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரான சத்தியமூர்த்தி அவர்களும் சண் சுந்தரம் ஐயா அவர்களுக்கு பக்க பலமாக இருந்து வருவதோடு அண்மையில் கிளிநொச்சியிலும் குறித்த ஓட்ட நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பல மாவட்டங்களிலும், பல்வேறு நகரங்களிலும். பிரதேசங்களிலும் குறித்த குழுமம் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

புதிய வெளிச்சம் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசங்களில் ஏற்கனவே இடம்பெற்ற விழிப்புணர்வு நடை பயணம் 

கனடாவை தளமாக கொண்டியங்கும் புதிய வெளிச்சம் அமைப்பு வருடாந்தம் நடாத்தி வரும் ஆரோக்கிய விழிப்புணர்வு நடை பயணம் கடந்த ஆண்டுகளில் இரண்டு தடவைகள் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை நகரங்களில் இடம்பெற்றிருந்தது. 

இரண்டு மாதங்கள் தினமும் 10000 காலடிகள் நடந்து ஒவ்வொருவரும் தங்கள் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற கருதுகோளில் இடம்பெறும் இந்நிகழ்வை புதியவெளிச்சம் அமைப்பின் நிறுவனர் அனந்தராஜ் நவஜீவன் அவர்கள் வருடாந்தம் தொடர்ந்து ஒழுங்கமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நன்றி - படங்கள் - ஐங்கரன், எஸ்.கே கோபி