கடந்து செல்லும் கொந்தளிப்பான ஆண்டு - நிலாந்தன்

 


இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் பல மாற்றங்கள் ஒன்றாக நிகழ்ந்து மிகக் கொந்தளிப்பான ஒரு ஆண்டு  நம்மைக்  கடந்து போகிறது. இந்த ஆண்டில்தான் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முப்பொழுதும் ஏற்பட்டிராத ஒரு பொருளாதார நெருக்கடி   ஏற்பட்டது.அதற்கு எதிராக சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள்.அரகலய என்று அழைக்கப்பட்ட அப்போராட்டமானது உலகத்தின் கவனத்தை ஈர்க்குமளவுக்கு படைப்புத்திறன் மிக்கதாக காணப்பட்டது.

போரை வெற்றி கொண்ட ஒரு குடும்பம் நாட்டின் கருவூலத்தை திருடிவிட்டது என்று சிங்கள மக்கள் குற்றம்சாட்டினார்.போராட்டத்தை ஒடுக்குவதற்கு அக்குடும்பம் குண்டர்களை ஏவி விட்டது. ஆனால் அது விபரீதமான விளைவைக் தந்தது. ஓரிரவுக்குள் 30 க்கும் குறையாத அரசியல்வாதிகளின் வீடுகளும் சொத்துக்களும் எரித்து அழிக்கப்பட்டன.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு பிரதேச சபைத் தலைவரும்  கொல்லப்பட்டார்கள்.இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில்  சிங்கள அரசியல்வாதிகளுக்கு   அப்படியோர்  அச்சம் நிறைந்த இரவு  முன்னெப்பொழுதும் வந்ததில்லை.அதன் விளைவாக ராஜபக்சக்கள்  ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்கள்.

ஏந்த ஒரு குடும்பத்துக்கு சிங்கள மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்களோ,அதே குடும்பத்தை அவர்கள் பதவிகளிலிருந்து துரத்தினார்கள். எனினும் அந்த குடும்பம் ஒற்றை யானைக்குப்பின் பாதுகாப்பைத் தேடிக் கொண்டது.மக்களால் நிராகரிக்கப்பட்டவரும்  தனது அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்துவரும் ஆழங்காண முடியாத தந்திரசாலியுமாகிய  ரணில் விக்ரமசிங்க அந்தப் போராட்டத்தின் கனிகள் அனைத்தையும் தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார்.அந்தப் போராட்டம் அவருக்கு ஓய்வூதியம் பெறும் காலத்தில் வாழ்வு கொடுத்தது. அப்போராட்டத்தை அவர் நசுக்கினார்.  

மன்னராட்சிக்கு எதிரான பிரஞ்சுப் புரட்சியின் கனிகளை நெப்போலியன் திருடியது போல,சிஸ்டத்துக்கு எதிரான அரகலயவின்  கனிகளை அந்த சிஸ்டத்தை பாதுகாக்கும் ஒருவர் தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார்.இப்படியாக கடந்து போகும் ஓர் ஆண்டு என்பது இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் நம்பமுடியாத மாற்றங்கள் நிகழ்ந்த ஓராண்டாக காணப்படுகிறது.இந்த மாற்றங்களின் தொகுக்கப்பட்ட விளைவுகளே இனிவரும் காலங்களில் இலங்கைத்தீவின் அரசியல் போக்கை தீர்மானிக்கப் போகின்றன.

இந்த மாற்றங்கள் அல்லது கொந்தளிப்புகள்  எவையும் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை.அவை அவற்றுக்கான தர்க்கபூர்வ  வளர்ச்சிகளின் தவிர்க்கப்படவியலாத விளைவுகளே. அவை இந்த ஆண்டில் ஒன்றாகத் திரண்டு வெளிப்பட்டன என்பதே சரி.ஆனால் அவற்றின்  தோற்றுவாய்கள்   பல தசாப்தகாலதுக்கு முந்தியவை.

பொருளாதார நெருக்கடி வானத்திலிருந்து தோன்றவில்லை. ராஜபக்சக்கள் கூறியதுபோல அது வைரஸினால் வந்ததும் அல்ல. அல்லது வெரிட்டே  ரிசேர்ச்  இன்ஸ்டிட்யூட் கூறுவதுபோல 2019இல் கோட்டாபய வரியைக்  குறைந்ததால் மட்டும்  தோன்றவில்லை. அல்லது ஈஸ்டர் குண்டுவெடிப்பின் விளைவாக மட்டும் தோன்றவில்லை. மாறாக அதன் வேர்கள் மிக ஆழமானவை, வெளிப்படையானவை.சிங்கள பௌத்த பெருந்தேசிய  வாதமும் அதன் தமிழ் நண்பர்களும் திட்டமிட்டு மறைபவை. ஆம். இனப்பிரச்சினை தான் பொருளாதார நெருக்கடியின் வேர்நிலைக் காரணம்.தீர்க்கப்படாத இனப்பிரச்சினையின் மீது எனைய உப பிரச்சினைகள் பிதிபலித்தன என்பதே சரி.

எந்த ஒரு குடும்பத்துக்கு சிங்கள மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்களோ  அதே குடும்பத்தை நாட்டை விட்டு துரத்தும் ஒரு நிலை ஏன் வந்தது என்பது முதல் கேள்வி. ராஜபக்ஷக்களுக்கு சிங்களமக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியது  ஏனென்றால் அவர்கள்  யுத்தத்தில் பெற்ற வெற்றிக்காகத்தான்.ராஜபக்ஷக்கள் யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கினார்கள் .ஈஸ்ரர் குண்டு வெடிப்பின் மூலம் வெற்றி வாதத்தை 2020க்குப்  புதுப்பித்தார்கள்.கோவிட-19 இன் மூலம் அதை 2021க்குப் புதுப்பித்தார்கள். இவ்வாறு யுத்த  வெற்றி வாதத்தை அவர்கள் புதுப்பித்த போதெல்லாம் சிங்கள மக்கள் அவர்களுக்குத் தேர்தல் வெற்றிகளைக் கொடுத்தார்கள்.

யுத்த வெற்றிவாதம் என்பது அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரானது.ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப்  பின் அது முஸ்லிம்களுக்கு எதிரானது. இவ்வாறு இரண்டு சிறிய தேசிய இனங்களுக்கும் எதிராக ஒரு இரும்பு மனிதனை தெரிந்தெடுத்த சிங்களமக்கள் அதே இரும்பு மனிதனை நாட்டை விட்டு ஓட விரட்டினார்கள்.இதன் பொருள் சிங்கள  பௌத்த பெருந் தேசியவாதம் ஞானம் அடைந்துவிட்டது என்பதல்ல.யுத்தத்தை வென்ற ஒரே தகுதி  காரணமாக ராஜபக்சக்கள் நாட்டின் கருவூலத்தை திருடி விட்டார்கள் என்பதுதான் அவர்களுடைய கோபம்.

இங்கு  உற்றுக் கவனிக்க  வேண்டியது என்னவென்றால், யுத்தத்தை வென்றமை எங்கே ஒரு தகுதியாக மாறுகிறது ?என்பதுதான்.ஆம்.யுத்த வெற்றி என்பது அடிப்படையில் தமிழ்மக்களுக்கு எதிரானது.தமிழ்மக்களுக்கு எதிரான வெற்றியைக்  கொண்டாடும் ஒரு அரசியல் பரப்பில்தான் ராஜபக்சக்கள் சிங்கள மக்களின்  மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை  வெல்ல முடிந்தது.எனவே இங்கு பிரச்சினையாகவிருப்பது ஒரு குடும்பம் அல்ல.யுத்த வெற்றியைக் கொண்டாடும் இனவாத அரசியல்தான்.இருந்த ஒரே தகுதி காரணமாக  ஒரு குடும்பம் முறைகேடான ஆட்சியை நடத்துவது என்பதே சரி. எனவே சிங்கள மக்கள் போராட வேண்டியது இனவாதத்தை எதிர்த்து தான். ஆனால், யுத்த வெற்றியை சிங்கள மக்கள் இப்பொழுது நிராகரிக்கவில்லை.அது மஹிந்தவுக்கு தெரிகிறது. அதனால் தான் பிலிப்பைன்சில் மார்க்கோசின்  மகன் வந்ததுபோல நாமலையும் ஒருநாள் ஜனாதிபதியாக்கலாம் என்று அவர் கனவு காண்கிறார்.

 எனவே  சிங்கள மக்கள் ராஜபக்சக்களைத் துரத்தியமை என்பது  அவர்களுடைய  முறைகேடான நிர்வாகம்  குடும்ப ஆட்சி போன்றவற்றுக்கு எதிராகத்தான்.நிச்சயமாக யுத்த வெற்றி வாதத்துக்கு தலைமைதாங்கியதற்காக அல்ல.ஆனால் முறைகேடான ஆட்சியும் குடும்ப ஆட்சியும் யுத்த வெற்றியின்மூலம் தங்களை பலப்படுத்திக் கொண்டன என்பதே உண்மை.யுத்த வெற்றியின்  மினுக்கத்துக்கு முன் ராஜபக்சக்களின்  குடும்ப ஆதிக்கம் முதலில் சிங்கள மக்களுக்குத்  தெரியவில்லை.

சாதாரண சிங்களமக்கள் மட்டுமல்ல அரகலயவை  வழிநடத்திய கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள்  மத்தியிலும் பொருளாதார நெருக்கடியின் மூல காரணங்கள் தொடர்பாக சரியான விளக்கம் இருக்கவில்லை.தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம்தான்  எல்லா பாவங்களுக்கும் முதல் பாவம்  என்பதை அரகலயக்காரர்களில் அநேகர் இப்பொழுதும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

தேர்தல் மூலம் வெற்றி பெறமுடியாத இடதுசாரி அமைப்புகள் சில அரகலயவை  பின்னிருந்து இயக்கின  என்று ராஜபக்சக்கள் குற்றம்சாட்டினர். அவ்வாறு குற்றம்சாட்டப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சிகூட,தமிழ்மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஸ்டியை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை.இதுதான் அரகலயவின்  அரசியல் நிலைப்பாடு. அதாவது  2022 க்குப் பின்னரான  சிங்கள பௌத்த  தேசியவாதத்தின்   நிலைப்பாடு அதுதான்.அதனால்தான் தமிழ்மக்கள் அரகலயவுடன்  முழுமையாக  இணையவில்லை.

அதாவது 2009 க்குப் பின்னரும் வென்றவர்கள் தோற்றவர்கள் என்று இரண்டாகப் பிளவுண்டிருந்த நாடு அரகலயவின் போதும் போராட்டக்காரர்களும் விலகிநிற்கும்  சாட்சிகளும் என்று இரண்டாகப் பிரிந்து நின்றது.மின்சாரம் இல்லாத இருண்ட இரவுகளில்  மெழுகுதிரிகளுக்கும்  பாண் துண்டுகளுக்குமாக  தெருவில் இறங்கிப் போராடிய அரகலயகூட  சிங்களபௌத்த பெரும் தேசியவாத சிந்தனை கட்டமைப்பிலிருந்து திருப்பகரமான விதத்தில் விலகி வரவில்லை.அதுதான் பிரச்சினை.

அந்த சிந்தனைக் கட்டமைப்புக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு சிந்திக்கும்வரை தமிழ் மக்களின் கவலைகளை,அச்சங்களை, காயங்களை விளங்கிக்கொள்ள முடியாது.இதனால் அரகலய  தமிழ் மக்களை தன்னோடு முழுஅளவுக்கு இணைத்துக்கொள்ள முடியவில்லை.இச்சிறிய தீவின் நவீன வரலாற்றில்  வந்த மிகக் கொந்தளிப்பான  ஓராண்டில் கூட   நாடு தமிழர்கள் சிங்களவர்கள் என்று இரண்டாகப் பிளவுண்டு  நின்றது.அதாவது நாட்டின் மிகக் கொந்தளிப்பான  ஓராண்டில் கூட நாடு இனரீதியாக இரண்டாகப் பிறவுண்டிருந்தது.

அரகலயவின்   பிரதான கோஷம்  சிஸ்டத்தை மாற்றுவது என்பதாகும். ஆனால் அவர்கள் சிஸ்டம் என்று கருதியது எதனை? ஆட்சி  நிர்வாகதத்தைதான். அரசுக் கட்டமைப்பை  அல்ல.சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பையல்ல. அங்கேதான் அடிப்படைத் தவறு நிகழ்ந்தது.அவர்கள் அந்தக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்தார்கள்.அதிலிருந்து விடுபட்டு அதையே எதிராக  பார்க்க அவர்களால் முடியவில்லை.

நாட்டில் அடிப்படையான  அரசுக் கட்டமைப்பு  மாற்றத்தை வேண்டி அவர்கள் போராடவில்லை.அரகலயவுக்குள் தீவிர இடதுசாரிகளிலிருந்து தீவிர வலதுசாரிகள் வரை எல்லாரும் இருந்தார்கள். அது ஒரு கதம்பமான கலவை.அதனால்,மேலிருந்து கீழ்நோக்கிய தலைமைத்துவ கட்டளைக் கட்டமைப்பு இருக்கவில்லை.பதிலாக பக்கவாட்டிலான இன்டர்நெட் போன்ற  இறுக்கமில்லாத  ஒரு  வலையமைப்பெ இருந்தது.அதனால்தான் ரணில் அதை இலகுவாக நசுக்கினார்.

இலங்கைத்தீவில் தோன்றிய நூதனமான பல முன்னுதாரணங்கள் கொண்ட படைப்புத்திறன் மிக்க ஓர் அறவழிப் போராட்டம் நசுக்கப்பட்டு விட்டது.கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இலங்கைத்தீவு நான்கு போராட்டங்களை வெற்றிகரமாக நசுக்கியிருக்கிறது.ஜேவிபியின் இரண்டு  போராட்டங்கள், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம், அரகலய   என்று அழைக்கப்பட்ட சிங்கள மக்களின் அறவழிப் போராட்டம்  என்று நான்கு போராட்டங்களை  நசுக்கியிருக்கிறது.சிங்கள ஆட்சியாளர்கள் அதை அரசியல் வெற்றியாக  கொண்டாட்டக் கூடும். 

ஆனால்   அரை  நூற்றாண்டு காலத்தில் நசுக்க நசுக்க மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்ற கேள்விக்கு அவர்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும்.சிங்கள பௌத்த  அரசியல் பண்பாடு  யாரைத்  தோற்கடிக்கின்றது? தன்னைத்தானே தோற்கடித்துக் கொண்டிருக்கிறதா? இந்த  ஆண்டு பிறந்தபோது  மக்கள் தெருக்களில் நீண்ட வரிசைகளில் நின்றார்கள்.பால்மா இருக்கவில்லை. ஏழைகளின் வீடுகளில் பால்தேநீர் இருக்கவில்லை. இந்த ஆண்டு முடியும்போது முட்டை விலை உயர்ந்துவிட்டது.ஏழைகளின் வீடுகளில் கேக் இல்லாத கிறிஸ்மஸோடு முடிகிறது இலங்கைத்தீவின் மிகக் கொந்தளிப்பான ஓராண்டு.

நிலாந்தன்-