விநாயகர் விரத நிறைவை முன்னிட்டு நாளை புதன்கிழமை(28.12.2022) யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் விசேட கணபதி ஹோமமும் திருமுறைப் பாராயணமும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
நாளை காலை-06 மணிக்கு விசேட கணபதி ஹோமம் ஆரம்பமாகும். தொடர்ந்து காலை-08 மணியளவில் பூசை வழிபாடுகளும் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை-09.30 மணியளவில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், சைவத்தமிழ்ச் சொற்பொழி வாளருமான செஞ்சொற்செல்வர். கலாநிதி. ஆறு.திருமுகன் தலைமையில் சிறப்பு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
நிகழ்வில் தருமை ஆதீன திருச்சி மெளனமட மற்றும் திருக்கேதீச்சர மடத் தம்பிரான் சுவாமிகள் அருளாசி உரை ஆற்றுவார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள தருமை ஆதீனப் புலவர் எம்.கே.பிரபாகரமூர்த்தி திருவாசக விளக்கவுரை நிகழ்த்துவார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேவார உதவிப் பேராசிரியர் முனைவர்.திருஞான.பாலச்சந்திரன் ஓதுவார் திருமுறைப் பாராயணம் இசைப்பார்.
இதேவேளை, மேற்படி வழிபாடுகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் தொடர்பில் இன்று இரவு யாழ்.குப்பிழான் கிராமத்தில் மக்களுக்கு அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)