அரசாங்கத்துடனான பேச்சு - தமிழர் தரப்பின் பொறுப்புகள்! தமிழ் சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கை

 


அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் தமிழ்த் தரப்புகளின் பொறுப்புப்பற்றி தமிழ் சிவில் சமூகத்தவர்களின் கரிசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாட்டை தமிழ் சிவில் சமூக அமையம் ஒருங்கிணைத்துள்ளது.  

தமிழ் சிவில் சமூக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு, 

இலங்கைத் தீவின் தேசங்களுக்கு  இடையிலான தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதி எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதிக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் காணப்போவதாகக் கூறுகின்றார். தமிழர் தரப்போ எவ்வித முன்னாயத்தமோ ஏகோபித்த கொள்கை இணக்கமோ இன்றி பேச்சுவார்த்தைகளில் இணைந்துள்ளது.

இலங்கை  இன்று பாரிய பொருளாதாரப் பேரழிவில் சிக்கியுள்ளது. கடந்த எட்டு தசாப்தங்களாக ஏனைய தேசங்களை, குறிப்பாக தமிழ்த்தேசத்தை சிங்களை பௌத்த மேலாதிக்கத்தின் எதிரியாகக் கருதி இலங்கை  செயற்பட்டதன் விளைவு இது. இந்த உண்மையை இன்றுவரை சிங்கள தேசத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ. புத்திஜீவிகளோ, அல்லது மக்களோ வெளிப்படையாக ஏற்றுக்கொண்டதில்லை.

உண்மையை ஏற்க மறுத்தாலும் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலமே தற்போதைய பொருளாதாரக் கையறு நிலையிலிருந்து மீளலாம் என்ற யதார்த்தம் உறைத்ததனாலேயே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அரசுத்தரப்பால் விடப்படுகின்றன. இதுவே இன்று தமிழர் தரப்புக்கான பலமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை தொடர்பான எமது கரிசனைகளை நாம் வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

1. பேச்சுவார்த்தையின் ஒரு தரப்பாக தமிழ்த்தேசத்தை இனவழிப்பு மூலம் அழித்துவிடவும் அதன் இருப்பையும் அடையாளங்களையும் அழிப்பதற்கும் இலங்கையர் என்ற செயற்கையான ஒற்றைத் தேசியத்தினுள் அனைவரது அடையாளங்களையும் கரைத்து விடுவதற்காக செயற்படுகின்ற சிங்கள தேசமும் மறு தரப்பாக இத்தீவின் வடக்கு-கிழக்கைத் தமது மரபுவழித் தாயகமாகக் கொண்டு, அரசியல் கோட்பாட்டினடிப்படையில் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்துகின்ற, அந்த அடையாளத்தை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான போராட்டங்களையும் வீரமும் தியாகங்களும் நிறைந்த விடுதலைப் போரையும் நடாத்திய, எப்போதும் தேர்தல்களில் அதற்கான ஆணைகளை மீள மீள வழங்கி வருகின்ற தமிழ்த் தேசமும் உள்ளன.

2. எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் எந்தத் தரப்புக்கும் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படையான விடயங்கள்; என சில இருக்கும். இனவழிப்பை எதிர்கொள்கின்ற தமிழ்த்தேசத்திற்கு எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாதவை அவர்களின் தேசிய இருப்புக்கான பாதுகாப்பும் தேசிய அடையாளங்களுக்கான பாதுகாப்புமாகும். இத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்த உத்தரவாதங்களைத் தருவதாகவே எப்போதும் இருக்க வேண்டும். இத்தீவின் தேசிய இனப்பிரச்சினை வரலாற்றில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் இலங்கை  அரசு தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டது.

இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் காலத்தை இழுத்தடிப்பதற்கும், தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதற்கும் அரைகுறைத் தீர்வுகளை திணிப்பதற்கான முயற்சிகளுக்கும், ஈற்றில் பயனற்ற பேச்சுவார்த்தைகளிலிருந்து தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டு வெளியேறும் போது தமிழர்கள் தீர்வுக்குத் தயாரில்லை என்ற பொய்யை உருவாக்குவதற்காகவுமே இலங்கை  அரசால் பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் மறக்கக் கூடாது.

3. முதலில், பேச்சுவார்த்தைகளுக்கான தெளிவான வழிவரைபடம் ஒன்றை இருதரப்புகளும் இணைந்து தயாரிக்க வேண்டும். இது, பிரதானமாக முக்கிய அடைவுகள், அவற்றுக்கான நேர அட்டவணை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

4. பேச்சுவார்த்தைகள், இனவழிப்பின் விளைவுகளாக தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள், இறுதி அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் என இரண்டு தளங்களில் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும்.

5. அன்றாடப் பிரச்சினைகளுக்கான தளத்தில் பின்வருவனவற்றை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி பேசப்பட வேண்டும்.

5.1. தமிழர் தாயகத்தில் நடைபெறும் சகல நில அபகரிப்புகளையும் நிறுத்துதலும் காணிகளை மீள வழங்கலும்

5.2. தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையிலான அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடன் நிறுத்துதல்

5.3. சிறைகளிலுள்ள சகல தமிழ் அரசியற் கைதிகளையும் நிபந்தனையற்று விடுவித்தல்

5.4. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணைகளை ஆரம்பித்தல்

5.5. தமிழ்ப்பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான எல்லை மறுசீரமைப்புகளை மீளப்பெறல்

5.6. தமிழர் தாயத்தின் குடிப்பரம்பலை மாற்றி அமைப்பதற்காக சுதந்திரத்திற்கு முன்பான பொறுப்பாட்சிக் காலத்திலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்டுவருகின்ற குடியேற்றங்களுட்பட அனைத்தையும் நிறுத்துதலும் அகற்றுதலும்

5.7. இராணுவமயமாக்க நீக்கம். உதாரணமாக, தமிழர் தாயகத்தை பெருமெடுப்பில் ஆக்கிரமித்து, தமிழர்களின் வாழ்வின் சகல அம்சங்களிலும், முன்பள்ளிகளுட்பட தமிழர்தாயகத்தின் சிவில் நிர்வாக செயற்பாடுகளிலும் சிறீ லங்காவின் முப்படைகளும் செய்து கொண்டிருக்கும் அனைத்துத் தலையீடுகளையும் முழுமையாக நிறுத்துதல், அவர்களை முகாம்களுக்குள் முடக்குதல் மற்றும் அளவையும் குறைத்தல்

5.8. தமிழர்கள், தமக்காக போராடி உயிர் நீத்தவர்களையும் இனவழிப்பின்போது இறந்த தமது உறவுகளையும் நினைவு கூர்வதற்கான உரிமையை தடுக்காது இருத்தல், சிறீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் உட்பட தமிழர் சார்பான சகல நினைவுச் சின்னங்களையும் விடுவித்தல், மீள அமைப்பதற்கான தடைகளை நீக்குதல்

5.9. ஈழத்தமிழர்களின் கோரிக்கையான, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, இனவழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக உடனடியாக சர்வதேச விசாரணைகளை முன்னர் ஒப்புக்கொண்டபடி ஆரம்பிக்க அனுமதித்தல்

5.10. இறுதி அரசியல் தீர்வு எட்டப்படும் வரை தமிழர்கள் தமது தாயகத்தின் அன்றாட அலுவல்களை நடாத்துவதற்காக இடைக்கால நிர்வாகப் பொறிமுறை ஒன்றை அமைத்தல்

இந்தப் பேச்சுவார்த்தைத் தளத்தில், இவற்றை அமுல்படுத்துவதற்கான கால அட்டவணைகள் பற்றி பேசப்பட வேண்டும். குறுகிய காலத்தில் இவற்றை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை மூலம் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தனது உறுதியையும் நேர்மையையும் தமிழ் மக்களுக்கும் உலகுக்கும் வெளிப்படுத்த முடியும்.

6. இரண்டாவது தளத்தில் இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கான இறுதி அரசியற் தீர்வு நோக்கிப் பேசப்பட வேண்டும். இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் காத்திரமானவையாக இருப்பதாயின் அவை இலங்கையின் தற்போதைய ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அப்பாலான தீர்வை நோக்கியதாக, ஆரம்பத்திலிருந்து இருக்க வேண்டும். 13ம் திருத்தத்தைப்பற்றி பேசுவது, அதன் ‘பிளஸ்’ பற்றி பேசுவது, ‘மேலவை’ பற்றிப் பேசுவது என்று ஒற்றையாட்சி அரசியல் யாப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தைக் கடத்தாது நேரடியாகவே தமிழர்களது அபிலாசைகளான பிரிக்க முடியாத தாயகம், தேசியம், தன்னாட்சி, இறைமை என்பவற்றைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அரசியற் தீர்வின் அடிப்படைகளாக வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவு என்பவற்றின் உள்ளடக்கங்கள் அமைய வேண்டும்.

7. தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சிவில் சமூகப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

8. தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டும் தமிழர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகளில்; கலந்துகொள்வது என்பது கனதியான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் சிறீலங்காவின் இராஜதந்திர சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் போதுமானது அல்ல. தமிழர்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக தமக்கென பல்துறைசார் மதியுரைஞர் குழுக்களை (அரசியல் யாப்பு நிபுணர்கள், காணி அபகரிப்புகள் மற்றும் காணிச்சட்டங்கள் தொடர்பான அறிவுடையோர், அரசியல் அறிஞர்கள், பொருளாதார அறிஞர்கள், பல்வேறு துறைகளில் நிர்வாக அனுபவமுடையவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பிராந்திய விடயங்களில் பரீட்சயமுடையவர்கள் என) உருவாக்க வேண்டும். அவர்களைத் தகுந்த சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளில் பொருத்தமான வகையில் இணைத்துக் கொள்வதுடன் அவர்கள் தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

9. இலங்கை  அரசுடன் தமிழ் மக்கள் நடாத்தும் எந்தவொரு பேச்சுவார்த்தையும் வெளிப்படைத் தன்மையுடன் நடாத்தப்பட வேண்டும். தமிழர் தரப்பு சார்பாக பங்கேற்பவர்கள், பேச்சுவார்த்தை பற்றியும் தீர்வுத் திட்டம் தொடர்பாகவும்; தமிழ் மக்களுடன் துணிச்சலான, வெளிப்படையான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக நடாத்தி, இறுதித் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றிய மக்களது அபிப்பிராயங்களை பெற்றுக் கொண்டு அவற்றுக்கு ஏற்பத் தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

10. அதே வேளை, சில விடயங்கள் உரிய காலம்வரை பகிரங்கப்படுத்தபட முடியாதவையாக இருக்கும் என்ற யதார்த்தத்தையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதனால் உருவாக்கப்படுகின்ற பல்துறைசார் மதியுரைஞர் குழுக்களுடன் அவ்வாறான விடயங்களுட்பட அனைத்து விடயங்களும் உடனுக்குடன் முழுமையாகப் பகிரப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, கலந்துரையாடப்படுவதன் மூலம் உரிய தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் தமிழ்த்தரப்பினர், தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களின் போதும்; பேச்சுவார்த்தையின் இறுதியிலும் பேச்சுவார்த்தை மற்றும் அதன் அடைவுகள் என்பன தொடர்பாக தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூறல் வேண்டும்.

11. முன்னைய பேச்சுவார்த்தைகளில் இந்தியாவும் ஏனைய சர்வதேச சக்திகளும் எவ்வாறு நடுநிலையோ, நியாயமோ இன்றி தமிழர்களது நலன்களுக்கு எதிராக நடந்து கொண்டன என்பதை நாம் அறிவோம். ஆனாலும் இந்தப் பேச்சுவார்த்தையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் - குறிப்பாக சிறீ லங்காவை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க முன்வரும் நாடுகள், மத்தியஸ்தம் வகிப்பது நல்லது என்றே நாம் நம்புகின்றோம். ஆனால் அவர்களது மத்தியஸ்தம் தொடர்பான விதிமுறைகள் முற்கூட்டியே உருவாக்கப்படல் வேண்டும். மேலும், இந்நாடுகளுடன் உலகில் இருக்கின்ற பிரபல்யமான, மனச்சாட்சியுள்ள, எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கின்ற, நசுக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுக்கின்ற, அழுத்தங்களுக்கு அடிபணியாத தனிநபர்களுள் சிலராவது மத்தியஸ்தர்களாகவும் கருத்துரைக்கும் பார்வையாளர்களாகவும் பேச்சுவார்த்தையில் இணைக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.

இவை அனைத்துக்கும் மேலாக, புலம்பெயர் தமிழர்களிடமும் ஏனைய சர்வதேச முதலீட்டாளர்களிடமும் பேச்சுவார்த்தையின் விளைவாக தமிழ் மக்கள் திருப்தியடையும் வகையிலான இறுதித்தீர்வு எய்தப்பட்டு, அது தமிழ் மக்களின் மத்தியில் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, அவர்களால் ஏற்கப்பட்டு, நடைமுறைக்கு வரும் வரையில் சிறீலங்கா பயனுறும் வகையிலான முதலீடுகளையோ அல்லது பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீட்கும் நோக்கிலான உதவிகளையோ மேற்கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம். இதேபோல் பேச்சுவார்த்தைகளில் தமிழர்தரப்பாகக் கலந்து கொள்பவர்களும்; இதே கோரிக்கையை புலம்பெயர் தமிழர்களிடமும் சர்வதேச முதலீட்டாளர்களிடமும் பேச்சுவார்த்தைக்கு எம்மை வற்புறுத்துகின்ற சக்திகளிடமும் பகிரங்கமாக வலியுறுத்துதல் வேண்டும்.

தற்போது சிறீ லங்காவை பொருளாதாரப் பேரழிவிலிருந்து மீட்பதற்கு உதவ முன்வரும் நாடுகளும் அமைப்புகளும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு என்பதை பொருளாதார உதவிக்கான முன்நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். பொருளாதார உதவிகளின் ஒவ்வொரு கட்டமும் பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு அடைவுடனும் பிணைக்கப்பட்டதாகவே இருக்கும் என்பதை உதவி வழங்குபவர்கள் சிறீலங்காவுக்கு கூறுவதுடன் அதையே நடைமுறைப்படுத்தவும் வேண்டும். வரலாற்றில் ஏற்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தை உலகம் சரியாகப் பயன்படுத்துவதாயின் சர்வதேச நாடுகளும் உதவி வழங்கும் நிறுவனங்களும் இதையே செய்ய வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

மேலும் தமிழ்த் தேசத்துடன் பேசுவது போலவே இத்தீவில் வாழும் முஸ்லிம்கள் மலையகத் தமிழர்கள் பறங்கியர், மலாயர் போன்ற சமூகங்களுடனும் சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை நடாத்துவதுடன் ஏனைய சமூகங்களுக்கு எதிராக இந்நாட்டில் புரையோடிப்போயுள்ள பௌத்த-சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கெதிரான முழுமையான நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நாம் சிறீ லங்கா அரசிடம் வலியுறுத்துகின்றோம்.

இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புகள்:

•            சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பு

•            நியு சன் விளையாட்டு கழகம்

•            புழுதி – சமூக உரிமைகளுக்கான அமைப்பு

•            அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு

•            தளம்

•            தமிழ் சட்டத்தரணிகள் பேரவை

•            யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

•            யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

•            நீதி சமாதான ஆணைக்குழு, யாழ்ப்பாண மறை மாவட்டம்

•            நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள் துறவிகள் - வடக்கு கிழக்கு

•            குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம்

•            அடையாளம் - கொள்கை ஆய்வுக்கான நிலையம்

•            கிராமிய உழைப்பாளர் சங்கம்

•            மறைநதி கத்தோலிக்க தொடர்பூடக மையம், யாழ்ப்பாண மறை மாவட்டம்

•            சுயம்பு - கலை பண்பாட்டு செயல்திறன் மையம், யாழ்ப்பாணம்

•            P2P மக்கள் இயக்கம்

•            தமிழ் சிவில் சமூக அமையம்

•            மலையக சமூக விஞ்ஞான ஆய்வு மையம்.

•            சமூக விஞ்ஞான ஆய்வு மையம்.

•            சமூக அபிவிருத்திக்கான செயற்பாட்டு மையம்.

•            மலையகத் தமிழர் பண்பாட்டுப் பேரவை

•            குரலற்றவர்களின் குரல்

•            வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வடக்கு கிழக்கு

•            யாழ் மாவட்ட பெண்கள் சமாசம்

•            அக்கினிச் சிறகுகள்.

•            இலங்கை பல்சமய கருத்தாடல் நிலைய சகவாழ்வு சங்கம், யாழ்ப்பாணம்

•            Centre for Accessibility Monitoring Information Disability. Batticaloa

குறித்த அறிக்கை PDF வடிவில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.