முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது 75 ஆவது வயதில் காலமானார்.
நேற்று வியாழக்கிழமை(12.01.2023) இரவு வாத்துவையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு, வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அவருக்குத் திடீரென சுகவீனம் ஏற்பட்ட நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு அவரது உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால் நோயாளர் காவு வண்டி மூலம் களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதேவேளை, ரெஜினோல்ட் குரே கடந்த-2016 பெப்ரவரி- 14 ஆம் திகதி வடமாகாணத்தின் ஐந்தாவது ஆளுநராக நியமிக்கப்பட்டுத் தொடர்ந்து ஐந்து வருடங்கள் பணியாற்றினார்.
இவர் கடந்த-2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை மேல்மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
அத்துடன் மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
இதேவேளை, குறிப்பிட்ட காலம் வரை இவர் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் பதவி வகித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.