இயற்கை விவசாய வார நிகழ்வுகள் வட-கிழக்கு, மலையகப் பகுதிகளில் முன்னெடுப்பு


புதிய வெளிச்சம் அமைப்பின் ஏற்பாட்டில் இவ் வருட இயற்கை விவசாய வார நிகழ்வாக இயற்கை வழி விவசாயப் பயிற்சிப் பட்டறைகள் மலையகம், கிழக்கு, வடக்கு மாகாணங்களில்   கடந்த டிசம்பர் மாதம்-31 ஆம் திகதி ஆரம்பமாகித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

எதிர்வரும் ஜனவரி மாதம்-8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்பட உள்ள 'இயற்கை விவசாய வாரம் 2023' இன் ஒரு அங்கமாகவும், இயற்கை விவசாயம் சார்ந்து புதிய வெளிச்சம் அமைப்பினர்  முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் ஐந்து வருடப் பூர்த்தியை முன்னிட்டும் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள இயற்கை வேளாண் விஞ்ஞானிகளான சுந்தரராமன்,  பாமாயன் மற்றும் இயற்கை விவசாயப் பயிற்றுனர் ராஜசேகர், குளியாப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த சிங்கள மொழியிலான இயற்கை விவசாயப் பயிற்றுனர் நிஹால் ரணசிங்க ஆகியோர்  பயிற்சிப் பட்டறைகளின் வளவாளர்களாகச் செயற்பட்டு வருகின்றனர்.  

ஏற்கனவே மலையகத்தின் ஹட்டன், நுவரெலியா ஆகிய பகுதிகளிலும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலும் இந்த வருடத்திற்கான இயற்கைவழி விவசாயப் பயிற்சிப் பட்டறைகள் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டுள்ளன.           


இந்நிலையில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடக் கேட்போர் கூடத்தில் நாளை வெள்ளிக்கிழமை (05.01.2023) காலை-09 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை இயற்கை வழி இயற்கை வேளாண்மையின் ஒருங்கிணைந்த பண்ணையம் தொடர்பான பயிற்சிப் பட்டறை நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

மண்வள மேம்பாடு, பயிர் வளர்ப்பு, இயற்கை இடு பொருட்கள், மரங்கள், காய்கறிகள், கால்நடைகள், பண்ணை வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு, திணையியல் பண்ணைக் கோட்பாடுகள், புதுப்பிக்கும் ஆற்றல்கள், பண்ணை நிதி வேளாண்மை ஆகிய உப தலைப்புக்களில் இந்தப் பயிற்சிப் பட்டறை நிகழ்வு நடைபெறும்.

இந்தப் பயிற்சிப் பட்டறை நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரும் இலவசமாகக் கலந்து கொண்டு பயன்பெற முடியும் என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  

இதேவேளை, 06.01.2022 வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம் எதிர்வரும்-08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை யாழ்.தெல்லிப்பழையில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 60 பேருக்கு இயற்கை விவசாயம் தொடர்பான வதிவிடப் பயிற்சி நிகழ்வுகள்  இடம்பெற ஏற்பாடாகி உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)