யாழ்.மாநகரசபையின் பாதீடு மீண்டும் தோல்வி: சபையின் செயற்பாடுகள் நிறைவுக்கு!

யாழ்.மாநகர சபையின் தற்போதைய முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டினால் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் சபையில் இரண்டாவது தடவையாக மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.  

யாழ்.மாநகர சபையின் விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(28.02.2023) மேற்படி மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தைச்  சபையில் மீண்டும் முதல்வர் ஆனல்ட் சமர்ப்பித்து உரையாற்றினார்.

இதனையடுத்து யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமையச் சபையின் செயலாளரால் பகிரங்க வாக்கெடுப்புக் கோரப்பட்டது.    

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் சபை உறுப்பினர் க.நித்தியானந்தன் நடுநிலைமை வகித்திருந்தார்.

இதனையடுத்து  உரையாற்றிய யாழ்.மாநகர முதல்வர் இன்றைய வரவு செலவுத் திட்டம் ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்பதை இந்தச் சபைக்கு அறிவித்து இத்துடன் யாழ்.மாநகரசபையின் செயற்பாடுகளை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் என்றார்.          

இதேவேளை, 45 உறுப்பினர்களை மொத்த உறுப்பினர்களாகக் கொண்டிருந்த யாழ்.மாநகர சபையில் ரெலோ கட்சியைச் சேர்ந்த யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன், புளொட்டைச் சேர்ந்த ப.தர்சானந், சு.சுபாதீஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பா.சாந்தரூபனும் இன்றைய கூட்டத்துக்குச் சமூகமளிக்கவில்லை.

கடந்த சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகரசபை உறுப்பினர் பா.பத்மமுரளி “வைக்கோல் பட்டறை நாய் போன்று சிலர் செயல்படுவதாக” தெரிவித்த நிலையில் அவர் மாநகர சபை நடவடிக்கையில் ஒரு மாதம் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டதுடன், அவரது ஒரு மாதகாலக்  கொடுப்பனவும் முதல்வரால் ரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதனால், அவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.  

பருத்தித்துறை வீதி, சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்.மாநகரசபை உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் சிகிச்சை பலனின்றி கடந்த-11 ஆம் திகதி  உயிரிழந்த நிலையில் மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கான பதவி வெற்றிடமாக இருந்து வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)