இணுவிலில் எட்டுத் தமிழறிஞர்களுக்கு தமிழேந்தல் விருது வழங்கிக் கெளரவம்

இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் தமிழ்நாடு கவிஞர்.கலைச்செல்வி புலியூர்க்கேசிகனின் "நற்திணைத் தலைவனின் நெஞ்சொடு கிளத்தல்" எனும் நூல் அறிமுக விழா கடந்த வெள்ளிக்கிழமை(24.02.2023) மாலை-04 மணி முதல்  யாழ்.இணுவில் பொதுநூலக தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது  


இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையத்தின் தலைவர் சி.புரந்தரா தலைமையில்  இடம்பெற்ற நிகழ்வில் இணுவில் பொதுநூலகப் போசகர் இரா.அருட்செல்வம் தொடக்க உரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஈ.குமரன் நூலின் அறிமுக உரையையும் நிகழ்த்தினர்.

நூலினை நூலாசிரியர் கவிஞர்.கலைச்செல்வி புலியூர்க்கேசிகன் வெளியிட்டு வைக்க இணுவில் அண்ணா தொழிலக அதிபர் நடராஜா திவாகர் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.


நிகழ்வில் எட்டுத் தமிழறிஞர்கள் உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் நூற்றாண்டு விழா தமிழேந்தல் விருது வழங்கிச் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டனர். இதற்கமைய சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், சைவத் தமிழறிஞருமான செஞ்சொற்செல்வர். கலாநிதி.ஆறு.திருமுருகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர்.மனோன்மணி சண்முகதாஸ் இணையர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி. சி.சிவலிங்கராஜா, பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்.கி. விசாகரூபன், கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை கலை, கலாசார பீடத் தலைவர் பேராசிரியர் திருமதி.எஸ்.கேசவன், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் ஆகியோர் தமிழேந்தல் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.லலீசனுக்கு உரிய விருதை அவர் சார்பில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் வேல்நந்தன் பெற்றுக் கொண்டார்.  

அத்துடன் உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் நூற்றாண்டு விழா நினைவு விருது இணுவில் பொதுநூலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பொதுநூலகம், குரும்பசிட்டி ஆ.சி.நடராஜா பொதுநூலகம் ஆகியவற்றிற்கு வழங்கிவைக்கப்பட்டது.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)