ஈழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் வருடாந்தக் குருபூசை நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.02.2023) யாழ்.கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
நேற்றுக் காலை-08 மணியளவில் சிறப்புப் பஜனை, கூட்டுப் பிரார்த்தனை என்பன ஆரம்பமாகி நண்பகல்-12 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெற்றது. தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் சிறப்பு அபிஷேகமும், நண்பகல்-12 மணியளவில் குருபூசை சிறப்புப் பூசை வழிபாடுகளும் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மதியம் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மேற்படி குருபூசை நிகழ்வில் கோண்டாவில் கிராமம், அயற் பகுதிகள் மற்றும் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
(செ.ரவிசாந்)