வருடம்தோறும் அகில இலங்கை சைவமகா சபையால் வழங்கப்படும் அன்பே சிவம் விருது-2023 கிழக்கின் உன்னத சிவதொண்டர் அம்பாறை சைவநெறிக் கூடத் தலைவர் க.கணேசனிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மகாசிவராத்திரி விரத தினமான நேற்று முன்தினம் சனிக்கிழமை(18.02.2023) அகில இலங்கை சைவமகா சபை ஏகமனதாக தீர்மானித்திருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்பே சிவம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழமை போன்று அடுத்த வருடம் தைப்பூச நாளன்று நடைபெறும் அன்பே சிவம் விருது வழங்கும் விழாவில் வைத்து மேற்படி விருது வழங்கிக் கெளரவிக்கப்படும்.
இதுதொடர்பில் அகில இலங்கை சைவமகாசபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இவர் கடந்த இரு தசாப்தங்களாக உன்னத தலைமைச் சிவ தொண்டராக வட-கிழக்கு மலையகத்தின் இணைப்புப் பாலமாக அன்பே சிவத்திற்கு உயிர் கொடுக்கும் பல மனிதநேயப் பணிகளை ஒருங்கிணைத்து எல்லைக் கிராமங்கள் மற்றும் குக் கிராமங்கள் எங்கும் பல பரிணாமங்களில் ஆற்றி வருகின்றார்.
சுனாமி, இறுதி யுத்தத்தின் பின்னரான காலப் பகுதி மற்றும் கொரோனாப் பேரிடர் காலத்தில் இந்தச் செயல்வீரரின் பணி மகத்தானது. பல எல்லைக் கிராம மக்களின் உடனடி மனித நேய அறக்கொடைகள், கல்வி உதவிகள், முன்பள்ளி நிர்மாணம், சிறார் போசாக்கு மேம்பாடு, பெண் தலைமைத்து குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல் போன்றவற்றிற்கு வட- கிழக்கின் உள்ளூர் மற்றும் புலம்பெயர் அறக்கொடையாளர்களை ஒருங்கிணைத்தலில் இவரின் பங்கு மகத்தானது.
பொத்துவில் பாணமை, கஞ்சி குடிச்சாறு, தங்கவேலாயுத புரம், குடிநிலம் என நீளும் மிக தொலைதூர போரின், புறக்கணிப்புக்களின் வடுக்களை சுமந்த ஊர்கள் அனைத்திற்கும் இவரின் மோட்டார் சைக்கிள் பயணித்திருக்கின்றது. உதவிகளைத் தகுந்த நேரங்களில் சேர்ப்பித்திருக்கின்றது. இயற்கை அனர்த்தங்களின் போது உடனடி உதவிக்கு அணியுடன் விரையும் மனிதநேயர் இவர்.
ஆண்டுதோறும் கதிர்காமம் மற்றும் ஈழத்துச் சிதம்பரப் பாதயாத்திரையில் இளம் சிவதொண்டர் பலரை ஒருங்கிணைத்து பயணிக்கின்றார். உகந்தை காட்டுப் பிரதேசத்தில் கதிர்காம யாத்திரிகர்களிற்குத் தேவையான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை சிவதொண்டர்களை ஒருங்கிணைத்து ஆற்றி வருகின்றார்.
ஆலயம் சமூக மையம் என்பதை செயற்படுத்தி காட்டிக் கொண்டிருக்கும் தற்போதைய அம்பாறை திருக்கோவில் கண்ணகி அம்மன் ஆலயத் தலைவராகவும் மகேசன் பணியும் மக்கள் பணியும் ஒருங்கே ஆலயம் ஊடாக ஆற்றிவரும் அறங்காவலராகவும் திகழ்கின்றார்.
கொரோனா பொருளாதார நெருக்கடியில் அரிசி விலை உயர்ந்த போது ஆலய பண்டகசாலையில் இருந்து நெல்லை மானிய விலையிலும், இலவசமாகவும் கோவிலைச் சார்ந்த நலிவுற்ற குடும்பங்கள் சகலருக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி விநியோகித்தார்.
அப்பர் பெருமானின் வழி தொண்டை இன்றும் செயலில் காண்பிக்கும் வண்ணம் தனது சிவ தொண்டர் அணியுடன் ஆலயப் பெருந்திருவிழாக்களைத் தொடர்ந்து பிரதேச வேறுபாடு இன்றி சிரமதானம் செய்யும் பணியில் இறங்கி தொண்டாற்றுகின்ற இனிய மனிதர்.
கிழக்கிலிருந்து வருகை தந்து யாழ்.நல்லூரில் சில ஆண்டுகள் தேர்த் திருவிழாவைத் தொடந்து சிவலிங்கம் பொறித்த மஞ்சள் சீருடையுடன் சிரமதானம் செய்த காட்சி நாடாளாவிய சிவதொண்டர், சிவமங்கையர் அணிகளை உருவாக்கப் புத்துணர்வு தந்தது எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த முறைகளில் குறித்த விருது மனிதநேய மருத்துவர் மகப்பேற்று நிபுணர் சரவணபவ மற்றும் புகழ் பூத்த மனிதநேய சமூகச் செயற்பாட்டாளரும், மூத்த கல்வியியலாளருமான அப்பாத்துரை பஞ்சலிங்கம், இறுதியாக வவுனியா கோவிற்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத் தர்மகர்த்தாவும், அருளகம் சிறுவர் இல்லம், சிவன் முதியோர் இல்லத்தின் ஸ்தாபகரும், சிவன் கோசாலையின் நிறுவுனருமான ஆறுமுகம் நவரட்ணராசா ஆகியோருக்கு வழங்கிக் கெளரவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.