கோண்டாவில் டிப்போவினுள் புதிதாக அந்தோனியார் சிலை நிறுவ முயற்சி!



இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை வளாகத்திற்குள் புதிதாக அந்தோனியார் சிலை ஒன்றை நிறுவுவதற்குத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அண்மையில் குறித்த சாலைக்கு மாற்றலாகி வந்துள்ள கத்தோலிக்கரான மூத்த அதிகாரி ஒருவர் கோண்டாவில் சாலைக்குள்அந்தோனியார் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சி செய்து பிரதேச செயலகத்திலும் உரிமம் பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.  

இந்த நிலையில் இதுதொடர்பில் சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் கவனத்திற்கு கொண்டு  நேற்று முன்தினம் வியாழக்கிழமை(16.02.2023) பிற்பகல்-02 மணியளவில் கோண்டாவில் சாலைக்குச் சென்று சாலையின் முதன்மைப் பிராந்திய முகாமையாளர் தர்மசேனனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது சைவ மக்கள் செறிந்து வாழ்கின்ற பூமி கோண்டாவில். அங்கே பிற மத அடையாளங்கள் புகுவதை அவர்கள் விரும்புவதில்லை. சைவத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் நடுவே அந்தோனியார் சிலையை வைக்க முயலாதீர்கள்.

பல்லாண்டுகள் ஊடாகப் பேருந்து மனைக்குள் மத அடையாளங்களைப் புகுத்துவதில்லை என்ற கோட்பாட்டையே தொடர்ந்தும் கடைப்பிடியுங்கள்.

சைவர்களின் கருத்தை அறிந்து அதற்கமைய அவர்களுக்கு இடையூறு இன்றி அவர்களுடைய எதிர்ப்பு இன்றி அந்தோனியார் சிலையை வைக்க முடியுமானால் வையுங்கள் என்றே பிரதேச சபை உங்களுக்கு உரிமம் தந்துள்ளது.

மத நல்லிணக்கமும் அமைதியும் எதிர்ப்புணர்வின்றியும் இருந்த  இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியரிடையேயும், சுற்றி வாழ்கின்ற மக்களிடையேயும் அருவருக்கத்தக்க மத வெறுப்பையும், மதவாதத்தையும் தூண்டுவதைச் சிவ சேனை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது.

கத்தோலிக்க கிறிஸ்தவ மத பரப்புனர்கள் அண்மைக்காலமாக முன்னெடுக்கின்ற Church Building as  a prelude to conversion என்ற மதம் மாற்றும் வழிமுறைகளில் ஒன்றே அந்தோனியார் சிலையின் வைப்பு.

சைவ மக்களின் எதிர்ப்பையும், உணர்வையும் மீறி அந்தோனியார் சிலை பேருந்து பணி மனைக்குள் அமையுமாயின் கடுமையான போராட்டம் நடைபெறும் என்பதையும் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலையின் முதன்மைப் பிராந்திய முகாமையாளரிடம் சுட்டிக் காட்டினார்.

அவரது கருத்துக்களை உள்வாங்கிய மேற்படி சாலையின் முதன்மைப் பிராந்திய முகாமையாளர் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்தார்.  


இதேவேளை, குறித்த செயற்பாட்டை எதிர்த்து கோண்டாவில் சாலை ஊழியர்கள் பலரும் ஒன்றிணைந்து வேலைநிறுத்தப் போராட்டமொன்றையும் முன்னெடுக்கத் தீர்மானித்திருந்த நிலையில் சிவசேனை அமைப்பின் தலையீட்டினால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.