சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள்


சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் பொருளாதார நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்களுக்கு 371, 000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும், 100,000 ரூபா நிதி உதவியும் வழங்கப்பட்டன.

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(24.02.2023) காலை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் வாராந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வைத்தே இவ்வாறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  


இதற்கமைய யாழ்.தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயத்தில் தரம்-10 இல் கல்வி பயிலும் கெருடாவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவிக்கும், யாழ்.புத்தூர் ஶ்ரீ சோமஸ்கந்தக்  கல்லூரியில் தரம்-06, தரம்-10 மற்றும் க.பொ.த.உயர்தரத்தில் கல்வி கற்கும் கலைமதி வீதி, புத்தூர் மேற்கைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கும், யாழ்.கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இரண்டு மாணவர்களுக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த மாணவனுக்கும் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.


இதேவேளை, மிருசுவில் பத்திரகாளி அம்மன் ஆலயத்துக்கு மூன்றாம் கட்டமாக தெய்வ விக்கிரகங்கள் கொள்வனவுக்காக ஐம்பதாயிரம் ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் வழங்கப்பட்டது. கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் இடம்பெறும் நடனமயில் போட்டி நிகழ்வுக்காக இரண்டாம் கட்டமாக 50,000 ரூபா நிதியும் வழங்கப்பட்டது.