மணிவண்ணன்- ஆனல்ட் யாழ்.மாநகர சபையில் வாக்குவாதம்

யாழ்.மாநகர சபையின் தற்போதைய முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டினால் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(28.02.2023) இரண்டாவது தடவையாக மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. 

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தைச்  சபையில் மீண்டும் முதல்வர் ஆனல்ட் சமர்ப்பித்து உரையாற்றியதையடுத்துப் பகிரங்க வாக்கெடுப்புக் கோரப்பட்டது.    

பகிரங்க வாக்கெடுப்பின் போது முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் முறை வந்த போது இந்த வரவு செலவுத் திட்டத்தில் நாங்கள் எங்களுடைய நீதிமன்றச் செயற்பாடுகளுக்குப் பங்கமில்லாதவாறு என ஏதோ கூற முற்பட்ட போது குறுக்கிட்ட யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் நீதிமன்றக் கதையெல்லாம் சபையில் கதைக்க முடியாது. வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்கின்றீர்களா? இல்லையா? என்று கூறிவிட்டு இருந்தால் சரி என்றார்.

இதனையடுத்து யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் எனக்கு இந்தச் சபையில் என்ன கதைக்க வேண்டும் என யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை என்றார்.

இதற்குப் பதிலளித்த முன்னாள் யாழ்.மாநகர முதல்வர்  உங்களுக்கு வகுப்பெடுக்கத் தேவை இல்லை. இது சபை தானே... இதனைப் பதிவு செய்ய முடியாது. செயலாளர் அறிவித்திருக்கின்றார். ஏற்றுக் கொள்கின்கிறீர்களா? ஏற்றுக் கொள்ளவில்லையா? என்று சொல்லுங்கள் என்றார்.

இதன்பின்னர் யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பங்கம் இல்லாத வகையில் நான் இதில் கலந்து கொண்டு இந்தச் சட்டவிரோத பாதீட்டினை எதிர்த்து வாக்களிக்கின்றேன் எனத் தெரிவித்து விட்டுத் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

(செ.ரவிசாந்)