கோண்டாவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அன்னபூரணி மண்டபம் திறப்பு

யாழ்.கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ  சிவமஹாகாளி அம்பாள் ஆலயச் சூழலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அன்னபூரணி மண்டபம் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை(23.02.2023) சிவமஹாகாளி அம்பாள் ஆலய அறங்காவலர் ச.குபேந்திரநாதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.  

நேற்று முற்பகல்-11 மணியளவில் சிவமஹாகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து மங்கள வாத்திய முழக்கத்துடன் தெய்வத் திரு உருவப் படங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முற்பகல்-11.30 மணிக்கு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கல்விக் கொடையாளர் இராசையா குவேந்திரநாதன் தம்பதிகள் குறித்த மண்டபத்தைச் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தனர். 

அதனைத் தொடர்ந்து பால் காய்ச்சும் நிகழ்வு இடம்பெற்றதுடன் வாழ்த்து உரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் இறுதியில் புதிய மண்டபத்தில் அடியவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது.    

 

இதேவேளை, கல்விக் கொடையாளர் இராசையா குவேந்திரநாதன் தம்பதிகள் ஸ்ரீ  சிவமஹாகாளி அம்பாள் ஆலயத்திற்கு என மனமுவந்து நன்கொடையாக வழங்கிய காணியில் கோண்டாவிலைச் சேர்ந்த உள்நாட்டு மற்றும் புலம்பெயர் அன்பர்களின் நிதிப் பங்களிப்பில் குறித்த மண்டபம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபம்  சிவமஹாகாளி அம்பாள் ஆலய அன்னதான மண்டபமாகவும், எதிர்வரும் காலங்களில் பொது மண்டபமாகவும் செயற்படுத்தப்படும் என மேற்படி ஆலய அறங்காவலர் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)