நல்லூரில் செல்லப்பா சுவாமிகளின் 108 ஆவது ஆண்டு குருபூசை நிகழ்வு

ஈழத்துச் சித்தர் பரம்பரையில் முன்னோடிகளில் ஒருவரான நல்லூர்த் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் 108 ஆவது ஆண்டு குருபூசை நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை (24.03.2023)  பருத்தித்துறை வீதி, நல்லூரில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகள் நினைவாலயத்தில் செல்லப்பா சுவாமிகளின் பரம்பரை வழிக் குடும்ப உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

காலை-10 மணிக்கு செல்லப்பா சுவாமிகள் நினைவாலயத்தில் திருமுறைப் பாராயணம், நற்சிந்தனைப் பாடல்களின் பாராயணம் ஆரம்பமாகும். தொடர்ந்து நண்பகல்-12 மணிக்கு விசேட பூசை, தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து நல்லூர்த் தேரடியில் வழிபாடுகளும் நடைபெறும்.

தொடர்ந்து பிற்பகல்-01 மணியளவில் மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) இடம்பெற உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.        

(செ.ரவிசாந்)