தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடுகிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!


நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை(15.03.2023) காலை-08 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப் புறக்கணிப்பை நாளை வியாழக்கிழமை(16.03.2023) காலை-08 மணியுடன் தற்காலிகமாக கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வரி விதிப்புக்கு எதிராகத் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கங்கள் கடந்த-9 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்திருந்தது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையொன்று இன்றைய தினம்  ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. குறித்த பிரேரணைக்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பியிருந்த பதில் கடிதத்தில் உள்ளடங்கியிருந்த சமிக்ஞைகள் தொடர்பில் கவனம் செலுத்திய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை நாளை காலை-08 மணியுடன் தற்காலிகமாக கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.