வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் தொழிற்சங்கப் போராட்டத்துக்கு ஆதரவு


பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை புதன்கிழமை (15.03.2023) முன்னெடுக்கும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் சில கோரிக்கைகளின் அடிப்படையில் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத் தலைவர் வி.விஜயரூபனின் கையொப்பத்துடன் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வாழ்க்கைச் செலவு உதவு தொகையாக 20,000 ரூபா வழங்க வேண்டும், அரச ஊழியர்களின் கடனுக்காக வங்கியினால் ஒருதலைப் பட்சமாக உயர்த்தப்பட்ட வட்டியினைக் குறைத்தல், அனைத்து அலுவலர்களுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதி செய்தல், அரச சுற்றுநிருபங்களைப்   புறந்தள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் பணிக்கமர்த்தும் செயற்பாட்டை அதிகாரிகள் உடனடியாக நிறுத்துதல்(நலன்புரி நன்மைகள் சபையின் தரவேற்றல் செயற்பாடு உள்ளடங்கலாக), அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிராமணக் குறிப்பைப் பூரணப்படுத்துதல், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பதிலீட்டுக் கடமைக் கொடுப்பனவு மற்றும் ஏனைய படிகளை வழங்குதல், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில் கெளரவத்தைப் பாதுகாத்தல்.

மேற்படி கோரிக்கைகளின் அடிப்படையில் எமது ஆதரவுடன் 15.03.2023 முன்னெடுக்கப்படும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வடமாகாணத்திற்கு உட்பட்ட மத்திய, மாகாண அரசுகளின் கீழான அமைச்சு, திணைக்களங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந் நாளில் கடமையைப் பகிஷ்கரித்து ஆதரவு வழங்குமாறும் அந்த அறிக்கையில் மேலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  

(செ.ரவிசாந்)