யாழ்.போதனா மருத்துவமனை மருத்துவக் கழிவுகள்: தப்பான எண்ணங்களை ஏற்படுத்துவது பொருத்தமற்றது!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டும் எரியூட்டி பழுதடைந்துள்ள நிலையில் புதிய எரியூட்டியைச் செயற்படுத்துவதற்கான கால எல்லை எமக்குத் தருகின்ற காணியில் தங்கியிருக்கின்றது. தெல்லிப்பழை எரியூட்டியைத் திருத்தம் செய்து மீளவும் இயங்க வைப்பதற்கான சரியான காலப் பகுதி குறிப்பிடப்படவில்லை. அதுவரை மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பாக எரிக்கப்படும் என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதிய எரியூட்டியொன்றை இன்னொரு இடத்தில் பாதுகாப்பாக அமைக்கும் வரையும், அதேபோன்று தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள புகையூட்டியைத் திருத்தம் செய்து மீண்டும் இயக்கும் வரை பாதுகாப்பாக இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்று மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டியது அவசியம். ஆகவே, இந்த விடயம் ஒரு பெரிய பிரச்சினை அல்ல. இந்த விடயத்தைப் பெரிய பிரச்சினையாக எடுத்து மக்கள் மத்தியில் தப்பான எண்ணங்களை ஏற்படுத்துவது பொருத்தமற்ற செயற்பாடு எனவும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(27.02.2023) முற்பகல்-11.15 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,        

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை உருவாக்கும் நிறுவனமல்ல. இங்கே 1300 படுக்கைகள் இருக்கின்றன. இந்த 1300 படுக்கைகளிலும் நோயாளர்கள் இருக்கின்றார்கள். இதற்கும் மேலதிகமாக சுமார் 800 தொடக்கம் 1000 நோயாளிகள் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு வருகின்றார்கள். சுமார்-2500 பேர் பல்வேறு மருத்துவக் கிளினுக்காக வருகின்றார்கள். இவர்களுக்கான இரத்தப் பரிசோதனையும், ஏனைய பரிசோதனைகளும் இங்கே இடம்பெறுகின்றன. இவ்வாறான சூழலில் மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக் கழிவுகளை இதுவரை காலமும் எரியூட்டி வந்த தெல்லிப்பழை எரியூட்டியில் ஏற்பட்ட சில திருத்த வேலைகள் காரணமாக கடந்த காலங்களில் சரியான முறையில் இயங்கவில்லை. தற்போது அதன் செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி வைத்திருக்கின்றோம்.தற்போது இதன் திருத்த வேலைகள் இடம்பெறுகின்றன.  

புதிய எரியூட்டி ஒன்றை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அண்மையான பகுதியில்  பொருத்தவிருக்கின்றோம். அதுவரை ஏனைய தனியார் எரியூட்டி  நிலையங்களுக்கு அனுப்பி மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பாக எரியூட்டல் செய்ய இருக்கின்றோம். ஆகவே, இதுதொடர்பில் எவரும் பதற்றமோ, பயமோ கொள்ளத் தேவையில்லை.

எரியூட்டியை ஒரு இடத்தில் அமைப்பதற்கு மத்திய சுற்றுச் சூழல் அதிகாரசபையின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறானதொரு அனுமதி கோம்பையன் மணல் மயானத்தின் ஒரு பகுதியிலும் பெறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நான் யாழ்.மாநகர முதல்வருடனும் கலந்துரையாடியிருந்தேன். அத்துடன் தொடர்ந்து வரும் நாட்களில் யாழ்.மாநகரசபை உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

இதுதொடர்பில் பல கலந்துரையாடல்கள் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலப் பகுதியில் நடாத்தப்பபட்டு மத்திய சுற்றுச் சூழல் அதிகாரசபை இந்த விடயம் தொடர்பில் எல்லாத் தகவல்களையும் பெற்று அனுமதி தந்திருந்தது.  இருப்பினும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வடமாகாண ஆளுநரின் செயலாளரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதத்தில் கோம்பையன் மணல் மயானப் பகுதி பொருத்தமில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நாங்கள் இதுதொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தி உள்ளோம். 

ஆனால், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலிருந்து 5 தொடக்கம் 10 கிலோ மீற்றர் வரையான சுற்றயலில் ஒரு எரியூட்டி அமைக்கப்பட வேண்டியது தேவையான விடயம்.  

நாங்கள் இந்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநருடனும், ஆளுநரின் செயலாளரிடமும் தொடர்பு கொண்டு கலந்துரையாடி உள்ளோம். இதுதொடர்பில் மாகாணக் காணி ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு பொருத்தமான இடத்தைப் பெறுமாறு வடமாகாண ஆளுநர் கூறியிருக்கின்றார்.    

ஒரு புதிய எரியூட்டியை அமைப்பதற்குச் சுமார் மூன்று கோடி வரையான நிதி தேவை. மருத்துவக் கழிவுகளை அதில் இருப்பதற்கான டீசல் அல்லது மின்சாரம் தேவைப்படும். அங்கு கடமை புரிபவர்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்ய வேண்டி வரும். இந்தச் செயற்பாடை மேற்கொள்வதற்காகத்  தனியாரிடம் பொறுப்பை வழங்கும் போது செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனால், மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பாக எரியூட்ட வேண்டும் என்பதற்காக இந்தப் பொறுப்பை நாங்கள் தற்காலிகமாகத் தனியாரிடம் வழங்கவிருக்கின்றோம்.                                      

வடமாகாணத்தின் ஏனைய எரியூட்டிகளுக்கு கொண்டு சென்று மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பாக எரிக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனினும், அங்குள்ள பொதுமக்கள் தூண்டப்பட்டுப் பிழையான விடயமாக மருத்துவக் கழிவுகள் எரியூட்டலை இட்டுச் செல்வது பொருத்தமான விடயமாக அமையாது. 

மருத்துவக் கழிவுகள் தொடர்பாகப் பிழையான அபிப்பிராயங்களைப் பரப்புபவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு   சிகிச்சைக்காக வரத் தான் வேண்டும் என்பதை மனம் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(செ.ரவிசாந்)