குஜராத் இஸ்லாமிய இன அழிப்பு நாளான நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(28.02.2023) மாலை-4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக ’குஜராத் இஸ்லாமிய இன அழிப்புக் குற்றவாளி மோடியே பதவி விலகு!’ என வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது.
இதன்போது 2002 குஜராத் படுகொலைகளை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் மேற்படி கோரிக்கையை வலியுறுத்திப் பல்வேறு முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இப் போராட்டத்திற்குப் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் செந்தில் தலைமையேற்றார். தேசிய லீக்கின் மாநிலத் தலைவர் தடா ரஹீம், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் ஜைனுலாதீன், எஸ்டிபி ஐ கட்சியின் சென்னை மாவட்டப் பொதுச்செயலாளர் அஸ்கர் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் சார்பாக மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் வெற்றிவேல் செழியன், பாட்டாளி வர்க்க சமரன் அணியின் மாநில அமைப்பாளர் மணி, சிபிஐ(எம்-எல்) செந்தாரகையின் சென்னை மாவட்டச் செயலாளர் கார்கிவேலன், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியைச் சேர்ந்த புவனசேகர், தமிழ்த்தேச இறையாண்மையைச் சேர்ந்த மாரியப்பன், சுயஆட்சி இயக்கத்தைச் சேர்ந்த லில்லி மேரிபாய், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் சென்னை– செங்கை மாவட்ட அமைப்பாளர் சரவணன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்புச் செயலாளர் மகிழன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.