மண்கும்பானில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை நிலையம் திறப்பு

வேலணைப் பிரதேச செயலக விதாத வள நிலைய நிர்வாகத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை நிலையம் கடந்த வியாழக்கிழமை(09.03.2023) காலை-10.30 மணியளவில் யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை வீதியில் மண்கும்பானில் தொழில்துறைத் திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விதாதா வள நிலையத் தொழில் முயற்சியாளர்கள் அமைப்பின் தலைவர் மகேஸ்வரநாதன் கிரிசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வேலணைப் பிரதேச செயலர் க.சிவகரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மேற்படி விற்பனை நிலையத்தைச் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

நிகழ்வில் வேலணை உதவிப் பிரதேச செயலர் ந.பிரணவன், யாழ்.மாவட்ட விதாதா உத்தியோகத்தர் திருமதி.கோமதி மாயக்கிருஷ்ணன், தொழில்துறைத் திணைக்கள யாழ்.மாவட்ட அலுவலர் நே.பிரதீபன், வேலணைச் சுகாதார மருத்துவ அதிகாரி அ.ஜெயக்குமரன், வேலணைப் பிரதேச சமுர்த்தி வங்கித்  தலைமையக முகாமையாளர் திருமதி.ஜெ.வசந்தி, வேலணைப் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர் திருமதி.வி.சுபோஜா, வேலணைப் பிரதேச செயலக தொழில்துறைத் திணைக்கள உத்தியோகத்தர் ரி.விஜிதரன், வேலணைப் பிரதேச செயலக தேசிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர் திருமதி.கி.பிரியந்தி, ஜே-11 மண்கும்பான் கிராம சேவகர் கே.வாகீசன், வேலணைப் பிரதேச செயலக விதாதா வள உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கிலும், ஆரோக்கிய உணவு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும் குறித்த விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி விற்பனை நிலையம் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய தினங்களில் காலை-08.30 மணி முதல் மாலை-04.30 மணி வரை திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(செ.ரவிசாந்)