வடக்கின் பெரும் சமர்: முன்னிலையில் யாழ்.மத்திய கல்லூரி!

"வடக்கின் பெரும் சமர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் துடுப்பாட்டப் போட்டி இன்று வியாழக்கிழமை (09.03.2023) காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துக் களமிறங்கி முதல் இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் துடுப்பாட்ட அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்துத் தமது முதலாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி அணியினர் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இன்றைய முதலாம் நாள் ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சார்பில் அஜய் 74 ஓட்டங்களையும், விதுஷன் 71 ஓட்டங்களையும் தமது அணிக்காகப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.                  

இதேவேளை, 116 ஆவது தடவையாக இவ் வருடம் இடம்பெறும் வடக்கின் சமர் துடுப்பாட்டப் போட்டி நாளை மறுதினம் சனிக்கிழமை(11.03.2023) வரையான மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக இடம்பெற உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


(செ.ரவிசாந்)