வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் அம்பிகை அவதரித்த திருநாளான மாசிமகத்தை முன்னிட்டு மாசிமக விசேட உற்சவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(06.03.2023) சிறப்பாக நடைபெற்றது.
நேற்று முன்தினம் அதிகாலை-05.30 மணியளவில் உஷக் காலப் பூசை ஆரம்பமாகி காலை-06 மணியளவில் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் மாசிமகத் தீர்த்தம் இடம்பெற்றது.
காலை-07 மணியளவில் கும்ப பூசை, காலை-08 மணியளவில் விசேட மஹா அபிஷேகம், முற்பகல்-10.30 மணியளவில் பூசை வழிபாடு என்பன இடம்பெற்றுத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடு, ஸ்வர்ணபத்ம புஸ்பார்ச்சனை என்பன இடம்பெற்றன. முற்பகல்-11.35 மணியளவில் துர்க்கை அம்பாள் சிறிய பூத் தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து உள்வீதி உலா ஆரம்பமானது.
இதேவேளை, மாசிமக நாளில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டதுடன் சில அடியவர்கள் பொங்கல் பொங்கிப் படையல் செய்தும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.(செ.ரவிசாந்)