சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை நேற்று வெள்ளிக்கிழமை ( 28.04.2023) நாடாளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
வாக்கெடுப்பின் போது சபையில் 79 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.எச்.எம். பெளஸி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துமிந்த திசாநாயக்க, அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்த ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, நிமல் லன்ஸா, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சுதந்திர மக்கள் கூட்டணி, உத்தர லங்கா சபாவ என அரசாங்கத்திலிருந்து விலகிச் செயற்படுவோரும், தேசிய மக்கள் சக்தியும் யோசனைக்கு எதிராக வாக்களித்தனர்.