இன்றைய ஹர்த்தால் இரண்டு முக்கியமான விடயங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றது. ஒன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்ற அரசாங்கத்தின் அராஜகத் திட்டத்தை தோற்கடிப்பது. மற்றையது தமிழ்மக்களின் மரபுவழித் தாயகமான வட- கிழக்கு மாகாணங்களில் எமது வரலாற்றுப் பாரம்பரியத்தையும், தொன்மையையும் சிதைக்கும் நோக்கத்துடன் ஆலயங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவது என்பதாகும்.இந்த இரண்டு ஆபத்துக்களையும் எதிர்த்துத் தோற்கடிப்பதைத் தவிர எமக்கு வேறு வழி கிடையாது எனத் தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை(25.04.2023) வட-கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலை முழு வெற்றியீட்ட வைப்பது எமது மக்கள் அனைவரினதும் உயரிய கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உரிமை உணர்வு கொண்ட சமூகம் என்ற அடிப்படையில் நாம் இதனைச் செய்தாக வேண்டும்.
எமது உறுதியான எதிர்ப்பைச் சர்வதேசம் உணர்ந்து கொள்ளக் கூடிய விதத்தில் வெளிப்படுத்துவதே இப்போது உடனடியாக நாம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கையாகும். இந்த எதிர்ப்பு நடவடிக்கையே ஓர் பூரண ஹர்த்தாலாக முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தக் ஹர்த்தால் வெற்றிபெற நாம் அனைவரும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும், கட்டுப்பாடாகவும் எதிர்வரும் 25 ஆம் திகதி செயற்பட வேண்டும்.
எமது வட-கிழக்கு மாகாணங்களில் வர்த்தக நிலையங்களை அடைத்துப் போக்குவரத்துக்களை நிறுத்திக் கல்வி நடவடிக்கைகளைக் கைவிட்டு ஒட்டுமொத்தமாக எமது பிரதேசம் ஸ்தம்பித்து நிற்பதை நாமனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த அமைதிவழிப் போராட்டத்தில் சமூகத்தின் சகல தரப்பினரும் பங்கேற்க வேண்டும்.
வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள், போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள், பணியாளர்கள், முச்சக்கரவண்டிச் சாரதிகள், சந்தை வர்த்தகர்கள், பல்துறை சார்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைவரும் தமது வழக்கமான பணிகளை நிறுத்தித் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என உரிமையுடன் அனைவரையும் கேட்கின்றோம்.
ஹர்த்தால் காரணமாக உடல் உழைப்பை நம்பி வாழும் தொழிலாளர்கள் மற்றும் பல்துறை சார்ந்த பணியாளர்கள் உட்படச் சகலருக்கும் ஏற்படக் கூடிய அசௌகரியங்களுக்கு நாம் வருந்துகின்றோம். இது நம் அனைவரினதும் பொதுவான போராட்டம் என்ற அடிப்படையில் இந்தப் பாதிப்புக்களை எமது மக்கள் சகித்துக்கொண்டு தமது பூரண ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் எனப் பணிவன்புடன் வேண்டுகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.