வட- கிழக்குத் தழுவிய கதவடைப்புப் போராட்டம்: தென் கயிலை, கீரிமலை ஆதீனங்கள் பூரண ஆதரவு

தமிழ்த்தேசியச் சக்திகளின் ஒருங்கிணைப்பில் இன்று செவ்வாய்க்கிழமை(25.04.2023) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் அபிலாசைகளை வலியுறுத்தும் வட-கிழக்குத்  தழுவிய கதவடைப்புப் போராட்டத்திற்குத் தென் கயிலை ஆதீன முதல்வர்  தவத்திரு. அகத்தியர் அடிகளார், கீரிமலை மெய்கண்டார் ஆதீன முதல்வர் தவத்திரு.உமாபதிசிவம் அடிகளார் ஆகியோர் இணைந்து தமது பூரண ஆதரவையும், ஆசியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பில் மேற்படி இரு ஆதீனங்களும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,    

அண்மைக்காலமாக வெவ்வேறு வடிவங்களில் வீரியம் பெற்றுள்ள தமிழின அழிப்புக்களிற்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழினமும் தமது எதிர்ப்பைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

எமக்கான பயனுறுதி வாய்ந்த தீர்வுகள் கிடைக்கும் வரை ஒட்டுமொத்தத் தமிழ்மக்களின்  சிவில் அமைப்புக்களும், தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்த தொடர் போராட்டத்தின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்படும் இந்தக் கதவடைப்பை அனைவரும் இணைந்து வலுச் சேர்ப்போம்.

இன்று வலியுறுத்தப்படும் எம் அடிப்படை உரிமைகள், மரபுரிமை சார்ந்த பிரச்சினைகளிற்குச் சரியான தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்டப் பாரிய போராட்டங்களிற்குத் தமிழ்ச் சமூகம் தயாராக உள்ளது என்பதை அரசும், சர்வதேசமும் புரியும் வகையில் எமது கதவடைப்பு ஒருமித்த ரீதியில் வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகம் தழுவியதாக அமைய அனைத்துத் தரப்பினரையும் வடக்கு- கிழக்கைச் சேர்ந்த சைவ ஆதீனங்களாகிய நாம் கேட்டு நிற்கின்றோம்.  

அதேநேரம் தமிழ்மக்களின் அபிலாசைகளிற்குத் தொடர்ந்தும்  அரசு செவிசாய்க்காத நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் ஏகோபித்த குரலைப் பிரதிபலிக்கும் வகையில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்குமாறும் கேட்டு நிற்கின்றோம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.