வெடுக்குநாறி மலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவு

வவுனியா- வெடுக்குநாறி மலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை(27.04.2023) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், சிலைகள் இன்றி அங்கு வழிபாடுகள் நடாத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாறி மலையிலிருந்த திருவுருவச் சிலைகளும், பூசைப் பொருட்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பு மன்றில் சுட்டிக்காட்டியது. 

விடயங்களை ஆராய்ந்த வவுனியா நீதவான் வெடுக்குநாறி மலையிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட சிலைகளை அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யுமாறும், பூசைப் பொருட்களைச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் திருவுருவச் சிலைகள் மீளவும் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார். 

வெடுக்குநாறி மலையிலிருந்த விக்கிரகங்களைச் சேதப்படுத்தியமையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதைத் துரிதப்படுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.  

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார். 

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம்-17 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.