ஊரெழுவில் கோர விபத்து! படுகாயமடைந்த வயோதிபப் பெண் உயிரிழப்பு: நகைகளையும் விட்டு வைக்காத ஈனர்கள்!!

யாழ். ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை(28.04.2023) மாலை-05.15 மணியளவில் நடைபெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தான் பிறந்த இடமான  ஊரெழுவில் அமைந்துள்ள இரு ஆலயங்களுக்குச் சென்று விட்டுத் துவிச்சக்கரவண்டியில் உரும்பிராயில் அமைந்துள்ள தன் வசிப்பிட வீட்டிற்குக் குறித்த வயோதிபப் பெண்மணி  துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் மஞ்சள் கடவையின் எல்லையில் பின்னால் வேகமாக வந்த பட்டா  ரக வாகனம் வயோதிபப் பெண்ணைச் சடுதியாக மோதித் தள்ளியது. சம்பவத்தில் வயோதிபப் பெண் தூக்கி வீசப்பட்டுத் தலையில்  படுகாயமடைந்தார்.

சம்பவம் இடம்பெற்றவுடன் அப் பகுதியில் மக்கள் அதிகளவில் சூழ்ந்தமையால் அச்சமுற்ற பட்டா  ரக வாகனத்தில் வந்தவர்களே குறித்த வயோதிபப் பெண்ணைத் தமது வாகனத்தில் கொண்டு சென்று  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து நழுவியுள்ளனர்.

இந்நிலையில் சுயநினைவற்று ஆபத்தான நிலையிலிருந்த குறித்த வயோதிபப் பெண்மணிக்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு-12 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் வடக்கு கற்பக விநாயகர் கோவில் கிளை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. உமாதேவி கனகநாயகம்(வயது-73) என்ற வயோதிபப் பெண்மணியே இவ்வாறு உயிரிழந்தவராவார். விசாரணைகளைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நாளை நண்பகல் உரும்பிராயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அம்மையாரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது.             

பட்டா ரக வாகனத்தைச் செலுத்தி வந்தவர் உட்பட வாகனத்தில் இருந்தவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்துள்ளதுடன் வேகமாக வாகனத்தைச் செலுத்தியே மோதியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் நடைபெற்றுச் சில நிமிடங்களில் அப் பகுதியில் நின்றவர்களால் பொலிஸாரின் அவசரத் தொலைபேசி இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்ட போதிலும் நேற்று இரவு-07.45 மணியளவிலேயே கோப்பாய்ப் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் விபத்துக்குக் காரணமான பட்டாரக வாகனம் பொலிஸாரால் இன்றையதினம் மீட்கப்பட்ட நிலையில் விபத்திற்கு காரணமானவர்களைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இதேவேளை,  விபத்து ஏற்படும் போது தனது மனைவி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், காப்பு உள்ளிட்ட ஆறு பவுண் தங்க நகைகள் மருத்துவமனையில் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பாக அபகரிக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த மூதாட்டியின் கணவரான ஒய்வுநிலைக் கிராமசேவகர் கனகநாயகம் தெரிவித்தார். தனது மனைவியின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். 


(நேரடி ரிப்போர்ட்:- செ.ரவிசாந்)