தமிழினப் படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு

தமிழர் தாயகமான முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்த இறுதிக்கட்டப் போரில் உயிர்நீத்த மக்களை நினைவு கூரும் வகையில் வலிகள் பல சுமந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு வாரம் வருடாந்தம் மே மாதம்- 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


இறுதிக் கட்டப் போரின் இறுதிநாளான இன்று வியாழக்கிழமை(18.05.2023) முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 14 ஆம் ஆண்டு மே-18 நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது.       
இந்நிலையில் இன்றையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மண்ணில் அமைந்துள்ள நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 14 ஆம் ஆண்டு மே-18 நினைவேந்தல் நாளின் பிரதான நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இன்று காலை-10.29 மணியளவில் மணி ஒலியுடன் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து காலை-10.30 மணியளவில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டுத் தொடர்ந்து பொதுச் சுடரும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து காலை-10.40 மணியளவில் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிடப்பட்டது.முள்ளிவாய்க்கால் பிரகடன உரையை முள்ளிவாய்க்கால் பொதுக் கட்டமைப்பின் சார்பில் தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்த தமது உறவுகளை அவர்களின் உறவினர்கள், இந்துக் குருமார்கள், கிறிஸ்தவ மத குருமார்கள், அருட் சகோதரிகள், முன்னாள் போராளிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள், தமிழ்த்தேசியக் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள், பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் எனப் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.


 

குறிப்பாகத் தமது உறவுகளை நினைந்து அவர்களின் உறவுகள் கண்ணீர் சிந்தி நினைவு கூர்ந்தனர்.  

இதேவேளை, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 14 ஆம் ஆண்டு மே-18 நினைவேந்தல் நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்ததுடன் முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லும் மக்களின் வசதி கருதி  யாழ்.மாவட்டம் உட்படப் பல இடங்களிருந்தும் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.