மரணத்தில் பூத்த மலையகம்: யாழில் நடந்தேறிய 200 ஆவது ஆண்டு நிகழ்வு

மலையக மக்களின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் மரணத்தில் பூத்த மலையகம் எனும் தலைப்பிலான 200 ஆவது ஆண்டு நிகழ்வு கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை(27.05.2023) காலை-10 மணி முதல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என்.இன்பம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மலையக மக்களின் மாண்பினைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அருட்பணி மா.சக்திவேல், பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் இயக்குனர் அன்டனி ஜேசுதாசன், அரசியல், சமூக ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்க உபதலைவர் பொ.தை.ய.யசோதரன், யாழ்.மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன்,  பூந்தளிர் யாழ்.மாவட்டப் பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி.ரவீந்திரன் பிரியா, நிலமற்றோர் மக்கள் இயக்கத்தின் நிர்வாக உறுப்பினர் திருமதி.இதயராஜ் சைலா மற்றும் மலையகத் தோட்டத் தொழிலாளிகளான திருமதி.அ.சாலட், பி.சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு உரைகள் நிகழ்த்தினர்.  

மேற்படி நிகழ்வில் கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என்.இன்பத்தின் நெறியாள்கையில் சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளின் நடிப்பில் உருவான மரணத்தில் பூத்த மலையகம் எனும் தலைப்பிலான நாடகம் மேடையேற்றப்பட்டது. மலையக மக்களின் அவல வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் வகையிலான இந்த நாடகம் பார்வையாளர்களை வெகுவாகக்  கவர்ந்தது.


 

அத்துடன் மாணவர்களின் நடனம், பேச்சு நிகழ்வுகளும் நடைபெற்றன.

கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் சமூக சேவைகளுடன் இணைந்துள்ள மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜேக்கப் பேரின்பநாயகம், இராமையா இரத்தினசிங்கம், திருமதி. தர்மலிங்கம் புவனேஸ்வரி, திருமதி.ஜீவசோதி சிவதீபன் ஆகிய நால்வரும், குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இரு மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டனர்.  


 

அத்துடன் கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


(செ.ரவிசாந்)