சந்நிதியிலிருந்து கதிர்காமக் கந்தனுக்கான பாத யாத்திரை ஆரம்பம்: அடியவர்கள் பக்திப் பரவசம்

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடி வழிபடப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடி வேல் மஹா உற்சவத்தை முன்னிட்டுப் பன் நெடுங் காலமாக இடம்பெற்று வரும்  கதிர்காமக் கந்தன் ஆலயத்திற்கான பாதயாத்திரை பிரசித்திபெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து நேற்றுச் சனிக்கிழமை(06.05.2023) காலை-09 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்கப் பக்திப் பரவசத்துடன்  ஆரம்பமானது.

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து ஆலயக் கருவறையில் பூசை வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட பாதயாத்திரைக்கான முருகப் பெருமானின் பிரதான வேல் கப்புறாளையால் பாத யாத்திரைக்குத் தலைமை தாங்கிச் செல்லும் ஜெயா சாமியின் கையில் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து பஜனைகள் பாடியவாறு பாதயாத்திரையில் கலந்து கொண்ட அடியவர்கள் சந்நிதி முருகன் ஆலயத்தை வலம் வந்தனர்.


அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சந்நிதி ஆலயச் சூழலில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தைச்  சென்றடைந்த பாத யாத்திரைக் குழுவினர் அங்கு இடம்பெற்ற சிறப்புப் பஜனை, பூசை வழிபாடுகளிலும், தொடர்ந்து காலை வேளை ஆகார உபசாரத்தையும் நிறைவு செய்தனர். 

தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் மழைக்கு மத்தியிலும் தமது பாத யாத்திரையைத் தொடர்ந்தனர்.  


நேற்று இரவு-07 மணியளவில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தைச் சென்றடைந்த பாதயாத்திரைக் குழுவினர் அங்கு அம்மனைத் தரிசித்துப் பஜனை வழிபாடுகளிலும் கலந்து கொண்டு இரவு தங்கியிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை(07.05.2023) அதிகாலை-03 மணி முதல்   மீண்டும் தமது பாத யாத்திரையைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பாதயாத்திரைக் குழுவினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகலை ஊடாக பல ஆலயங்களையும் தரிசித்துப் பஜனை வழிபாடுகளுடன் அடுத்தமாதம்-19 ஆம் திகதி கதிர்காமக் கந்தன் ஆடிவேல் மஹா உற்சவத்தின் ஆரம்ப நாளன்று கதிர்காமக் கந்தன் ஆலயம் சென்றடைந்து கந்தனைத் தரிசனம் செய்யவுள்ளனர்.



இதேவேளை, இந்த வருடப் பாதயாத்திரையின் ஆரம்பத்திலிருந்து யாழ்.மாவட்டம் உள்ளிட்ட     வடக்கின் பல பகுதிகளையும் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டுள்ளதுடன் அவர்களில் பெண் அடியவர்களும் ஆண்களுக்கு நிகராக இணைந்துள்ளனர். 

பாத யாத்திரை செல்லும் பகுதிகளிலும் மேலும் பல அடியவர்கள் இணைந்து கொள்வார்கள் என மேற்படி பாதயாத்திரைக் குழுவினர் தெரிவித்தனர்.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)