சுன்னாகம் கதிரமலையானின் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்

பிரசித்திபெற்ற யாழ்.சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.



தொடர்ந்தும் 13 தினங்கள் இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளதுடன்  எதிர்வரும்- 15 ஆம் திகதி திங்கட்கிழமை திருவேட்டைத் திருவிழாவும், 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 17 ஆம் திகதி புதன்கிழமை கிருஷ்ணகந்தோற்சவத் திருவிழாவும், 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் காலை உற்சவம் காலை-06.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகும். மாலை உற்சவம் மாலை-04 மணிக்குச் சாயரட்சைப் பூசையுடன் ஆரம்பமாகும். மஹோற்சவ காலங்களில் தினமும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, மஹோற்சவப் பெருவிழா நாட்களில் மகா யாகம் இடம்பெறுவதால் யாகத்திற்குத் தேவையான பயறு, கடலை, எள்ளு, உழுந்து, நெற்பொரி உள்ளிட்ட தானியங்களையும், யாகத்திற்குத் தேவையான நெய்யையும் அடியவர்கள் ஆலயத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.