14 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கின் பல பகுதிகளிலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனணியின் ஏற்பாட்டில் மூன்றாவது நாளாக நேற்றுச் சனிக்கிழமை(13.05.2023) கைதடியிலும், நல்லூரிலும், யாழ்ப்பாணம் முலவைச் சந்நிதியிலும் பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
நேற்றுக் காலை-09.15 மணியளவில் கைதடியில் யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களையும், 13.8.1984 இல் படுகொலை செய்யப்பட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களையும் நினைவு கூரும் வகையில் கைதடிச் சந்திக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சாவகச்சேரிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், கட்சியின் மகளிர் அணியின் கலை பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளருமான திருமதி. கலைவாணி நிரஞ்சன் ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கைதடியில் படுகொலை செய்யப்பட்ட மக்களையும், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும், ஒட்டுமொத்தமாகத் தமிழர் தாயகத்தில் சிங்களப் பெளத்த பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளையும் நினைந்து ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. நினைவுரைகளை எழுத்தாளரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான மு.ஈழத்தமிழ் மணி, கட்சியின் மகளிர் அணித் தலைவி ஆகியோர் நிகழ்த்தினர்.
கைதடி உதயசூரியன் சனசமூக நிலையத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி காய்ச்சப்பட்டு நேற்றுக் காலை-07.30 மணி முதல் காலை-09 மணி வரை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபியடிக்கு அருகிலும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி காய்ச்சப்பட்டு நேற்று முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அத்துடன் நேற்றுப் பிற்பகல்-01 மணி முதல் பிற்பகல்-02.15 மணி வரை யாழ்ப்பாணம் முலவைச் சந்தியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வட்டார அமைப்பாளர் இரத்தினம் சதீஸ் தலைமையிலும் பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதேவேளை, மேற்படி மூன்று இடங்களிலும் நேற்றுப் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செ.ரவிசாந்)