புங்குடுதீவில் தனியார் பேருந்து உரிமையாளர் கோரப் படுகொலை: நீதி கோரிப் போராடிய ஐவரும் பிணையில் விடுவிப்பு!

புங்குடுதீவில் தனியார் பேருந்து உரிமையாளர் கோரப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரிப் போராடிய ஐவருக்கு எதிராக ஊர்காவற்துறைப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஐவரும் செவ்வாய்க்கிழமை (07.10.2025) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.    

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம்- 10 ஆம் திகதி வீடொன்றுக்குள் அத்துமீறி உள்நுழைந்து தனியார் பேருந்து உரிமையாளரொருவரை வன்முறைக் கும்பலொன்று மிகவும் கோரமான முறையில் படுகொலை செய்திருந்தது. கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்வதில் ஊர்காவற்துறைப் பொலிஸார் பின்னடிப்பதைக் கண்டித்து ஓகஸ்ட் மாதம்-15 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டவரின் பூதவுடலை வைத்து புங்குடுதீவு பிரதான வீதியை மறித்துப் போராடியமைக்கு எதிராகச் சட்டவிரோத குழுவாக ஒன்றுகூடி அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்பட்டு ஊர்காவற்துறைப் பொலிஸாரால்  தீவகம் சிவில் சமூகம் அமைப்பின் செயலாளர் மாணிக்கவாசர் இளம்பிறையன், மேற்படி அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன், வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் இரு பொதுமக்களின் பெயர் குறிப்பிட்டு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம்  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஐவரையும் ஆஜராகுமாறும் அழைப்பாணை நேரடியாக வழங்கப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி.நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜரான போது நீதிமன்றப் புறக்கணிப்புக் காரணமாகச் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை. இந் நிலையில் ஐவரையும் தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் விடுவித்த நீதிபதி வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம்-09 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.