தமிழ்த்தேசியப் பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் அப்புலிங்கம் உதயசூரியன் தனது உறுப்பினர் பதவியிலிருந்து தானாக முன்வந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (28.09.2025) விலகியுள்ளார். இதன்மூலம் தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரும், மூத்த தமிழ் அரசியல்வாதியுமான எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய உறுப்பினராகிறார். இந் நிலையில் அவர் மேற்படி சபையின் புதிய தவிசாளராக விரைவில் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகத் தெரியவருகின்றது..
வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் உதயசூரியனின் தன்னலமற்ற, முன்மாதிரியான செயற்பாட்டுக்குத் இன்று வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இன்றைய தினம் உதயசூரியனின் பிறந்த நாளாகும். அவர் எடுத்துள்ள முடிவுக்குச் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.