இறுதிநாள் போராட்டத்தில் தையிட்டியில் அனைவரையும் அணி திரளுமாறு அறைகூவல்

இறுதிநாள் போராட்டத்திற்காக யாழ்.தையிட்டியில் நாளை வெள்ளிக்கிழமை(05.05.2023) அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த்தேசியப் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது.

தையிட்டியில் தனியார் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராகவும், தனியாருடைய காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்றுப் புதன்கிழமை(03.05.2023) மாலை  ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இரவு, பகலாகத் தொடர்ந்தும்  இடம்பெற்று வருகின்றது. 

இப் போராட்டத்தைத் தடைசெய்வதற்கான உத்தரவினைக் கோரி நீதிமன்றுக்கு சென்ற பொலிஸார் நீதிமன்றில் பொய்களைக் கூறி நீதிமன்றத்தை தவறாக வழிநடாத்தி தடையுத்தரவைப் பெற முயன்றனர். 

எனினும், தையிட்டி மக்கள் சார்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகிய சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஷ் மற்றும் சட்டத்தரணி க.மகிந்தன் ஆகியோர் மக்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்தன் அடிப்படையில் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் விஜயம் செய்திருந்தார். 

விகாரையின் முகப்பிலோ, அல்லது பாதையிலோ தடைகளை ஏற்படுத்தாது வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கோ, விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்காமலும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடாத்தலாம் என்று நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

இதன்பிரகாரம் நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்ட வகையில் அமைதியான முறையில் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. 

இன்று வியாழக்கிழமை இரவு தொடரும் போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை) பிற்பகல்-03 மணி வரை தொடரும். 

பௌத்தப் பேரினவாத ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக ஒட்டுமொத்தத்  தமிழினமும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினாலே இவ்வாறான ஆக்கிரமிப்புக்களை கட்டுப்படுத்தவும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கவும்,  அத்துமீறிக் கட்டப்பட்ட விகாரையை அப்புறப்படுத்தவும் முடியும். 

இப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் நாளை வெள்ளிக்கிழமை(05.05.2023) காலை-08.30 மணியளவில் தையிட்டி விகாரைக்கு முன்பாக உள்ள தனியார் காணில் இடம்பெறும் அமைதியான போராட்டத்தில் கலந்து  கொண்டு போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.