போராட்டக்காரர்களுக்கு அஞ்சி தையிட்டியில் வாகனத்தைக் குறுக்காக விட்ட இராணுவம்!


 வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்துச் சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவும், விகாரையைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரியும் கடந்த புதன்கிழமை(03.05.2023) முதல்   பாதிக்கப்பட்ட பொதுமக்களும், தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினரும் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை(05.05.2023) இடம்பெற்றது. 

புதிதாக விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியில் இன்று மாலை-06 மணி முதல் வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந் நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் எழுப்பிய கோஷங்கள் அப்பகுதியெங்கும் ஓங்கி ஒலித்த வண்ணமிருந்தன.

இந்நிலையில் புதிய விகாரை அமைந்துள்ள காணிக்குள் இடம்பெறும் வெசாக் நிகழ்வுகள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக குறித்த காணிக்குள்ளேயே இராணுவத்தினர் குறுக்காக தமது வாகனத்தை விட்டிருந்தனர்.

அத்துடன் அப் பகுதியில் இராணுவமும், பொலிஸாரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.