சட்டவிரோத விகாரைக்கு எதிரான தையிட்டிப் போராட்டத்தின் இறுதிநாளில் ஆர்ப்பரித்த கோஷங்கள்



பாதிக்கப்பட்ட பொதுமக்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டம் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி இரவு, பகலாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நிறைவுநாள் போராட்டம் இன்று காலை-10 மணி முதல் எழுச்சியுடன் நடைபெற்றது.

இறுதிநாள் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ், கட்சியின் பிரச்சாரச் செயலாளர் சட்டத்தரணி ந.காண்டீபன், கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், முன்னாள் யாழ்.மாநகரசபை மற்றும் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வெசாக் பெளர்ணமி தினமான இன்றையதினம் புதிதாக விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியில் வெசாக் நிகழ்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் நடைபெற்று வெசாக் நிகழ்வுகள் இன்று மாலை-06 மணி முதல் ஆரம்பமாகி இடம்பெற்றது. வெசாக் கூடுகள் விகாரை அமைந்துள்ள காணியில் அமைக்கப்பட்டிருந்ததுடன் கண்டிய நடன நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

வெசாக் நிகழ்வுகளுக்காக இராணுவத்தினரின் வாகனங்களில் வெளியிடங்களிருந்து பெளத்த பிக்கு, இராணுவத்தினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மூடிய வாகனங்களுக்குள்  அழைத்து வரப்பட்டிருந்தனர். 


இந்நிலையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தமிழர் தேசத்தில் புத்தர் விகாரை எதற்கு?, அமைதிப் புத்தபெருமானை ஆக்கிரமிப்பின் சின்னங்களாக ஆக்காதே?, இனப்படுகொலை இராணுவமே வெளியேறு!, எமது நிலம் எமக்கு வேண்டும், சட்டவிரோத விகாரைக்கு காவற்துறைப் பாதுகாப்பா?, தையிட்டி மண் தமிழர் சொத்து, வெட்டுக்குநாறி தமிழர் சொத்து, குருந்தூர்மலை தமிழர் சொத்து, வடக்கும்- கிழக்கும் தமிழர் தாயகம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களைத் தமிழ், சிங்கள மொழிகளில் எழுப்பியதுடன் பல சுலோகங்களையும் தமது கைகளில் ஏந்தியிருந்தனர்.      


       

இதேவேளை, கடந்த வருடம் வெசாக் தினத்தன்று குறித்த பகுதியில் பெருமெடுப்பில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த போதிலும் மக்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டம் காரணமாக இன்றையதினம் புதிய விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிக்குள் மாத்திரம் வெசாக் நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.