அழகிய சப்பரத்தில் ஏழாலை அத்தியடி முருகமூர்த்தியார் வீதி உலா

ஏழாலை எனும் பெயர் உருவாகக் காரணமான யாழ்.ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று புதன்கிழமை(03.05.2023) இரவு சிறப்பாக இடம்பெற்றது.    


இன்று இரவு-07 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான் உள்வீதியில் எழுந்தருளி அதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த அழகிய சப்பரத்தில் ஆரோகணித்தார்.

அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம், மங்கள வாத்தியங்கள் முழங்க இன்று இரவு-08.30 மணியளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சப்பரப் பவனி ஆரம்பமானது.              


இதேவேளை, இவ் ஆலய மஹோற்சவத்தில் நாளை-04 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழாவும், நாளை மறுநாள் 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-09 மணிக்குத் தீர்த்த உற்சவமும், அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.

(செ.ரவிசாந்)