தமிழர் தாயகத்தில் வரலாற்றை மாற்றியமைக்கின்ற முயற்சிகளில் சிங்களப் பெளத்த பேரினவாத அரசு ஈடுபடுவது தமிழ்மக்களின் இருப்பை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள். இதனை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். தமிழ்மக்களின் இருப்பைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்தும் நாங்கள் போராடுவோம். கந்தரோடையில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழ்மக்களின் இருப்புக்காக மக்களுடன் சேர்ந்து தொடர்ந்தும் போராடுவதற்கு நாம் தயாராகவுள்ளோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
யாழ். கந்தரோடையின் வரலாற்றைச் சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழ்த்தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்புச் செயற்பாட்டிற்கு எதிராக அண்மையில் யாழ்.கந்தரோடையில் தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந்தரோடைச் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் கந்தரோடை மண்ணில் தமிழர்களின் கலாசார அடையாளங்களை அழித்தும், மாற்றியமைத்தும் ஒரு சிங்கள- பெளத்த பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக இந்தப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் பெளத்தர்கள் இறந்த பின்னர் அவர்கள் புதைக்கப்பட்ட ஈமத் தாளிகளைச் சுற்றிக் கோபுரம் மாதிரியான தமிழ்ப் பெளத்த அடையாளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த உண்மை கடந்த பல தசாப்தங்களுக்கு முன்பாகவே ஆய்வாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் நூறு வீதமான கட்டுப்பாட்டில் யாழ். குடாநாடு இருந்ததுடன் அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரை எங்கும், எதையும் செய்யக் கூடிய வல்லமையுள்ளவர்களாக விடுதலைப் புலிகள் இருந்தார்கள். எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் கந்தரோடையில் அமைந்துள்ள தமிழ்ப் பெளத்த அடையாளங்களை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதில்லை. ஆரியகுளத்தில் அமைந்துள்ள விகாரையிலும், நயினாதீவில் அமைந்துள்ள விகாரையிலும் எந்தவொரு இடத்திலும் அவர்கள் கை வைக்கவில்லை.
ஏனெனில், கந்தரோடையில் தமிழ்ப் பெளத்த அடையாளங்கள் காணப்படும் சூழல் ஒரு தொல்பொருள் இடமாகவே பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாகவிருந்தார்கள்.
தற்போது கந்தரோடையில் தொல்பொருட் சின்னங்கள் அமைந்துள்ள காணிக்குள் ஒரு பாரிய புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தர் சிலை சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குள் தொல்பொருட் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாறு நூற்றுக்கு நூறு வீதம் அப்பட்டமான பொய்யான வரலாறு. எனவே, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விளம்பரப் பலகை உடனடியாக அகற்றப்பட வேண்டும். கந்தரோடைப் பகுதியைச் சிங்கள- பெளத்த மயமாக்கும் செயற்பாடுகளைத் தொல்லியல் திணைக்களம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. இத்தகைய செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தொல்பொருட் சின்னங்கள் கொண்ட கந்தரோடையில் அமைந்துள்ள குறித்த காணிக்குள் என்ன அடிப்படையில் இராணுவத்தினர் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்? காவல் கடமைகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினருக்கு அதிகாரங்களிருக்கலாம். எனினும், நாம் அங்கு செல்கின்ற போது உள்ளே வரலாம். வரக் கூடாது என்கின்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பவர்களாக இராணுவத்தினர் இருக்கின்றனர். எனவே, இது தொல்பொருட் திணைக்களத்தினரின் அலுவலகமா? அல்லது இராணுவத்தினரின் அலுவலகமா? என்பது கூட தெரியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.
சிங்களப் பெளத்தர்களுக்குச் சொந்தமான ஒரு பிரதேசமாக வரலாற்றை மாற்றியமைக்கும் வகையில் கந்தரோடையில் தொல்பொருட் திணைக்களம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே தமிழ்மக்கள் செறிந்து வாழும் தமிழ்ப் பெளத்த தொல்பொருட் சின்னங்கள் காணப்படும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள காணியொன்றைத் தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் கொள்வனவு செய்துள்ள நிலையில் அதற்குள் புத்த விகாரையை அமைப்பதற்கான அனுமதியைக் கோரியிருக்கிறார். இதனை முற்றுமுழுதாக நாங்கள் எதிர்க்கின்றோம்.
தமிழ்மக்களின் இருப்பை அழிக்கும் முகமாக, கலாசார- வரலாற்றுப் பாரம்பரியங்களை மாற்றியமைக்கும் விதமாக எடுக்கப்படுகின்ற எந்தவொரு சிங்கள- பெளத்த மயமாக்கல் நடவடிக்கையையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமிழ்மக்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)