யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு உப்பு இல்லை எனச் சலித்துக் கொண்ட பெண்!

14 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரத்தை நினைவுகூர்ந்து வடக்கு- கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(14.05.2023) யாழ்.திருநெல்வேலியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்டது. 

நேற்றுக் காலை-09.45 மணி முதல் திருநெல்வேலிப் பொதுச் சந்தை வியாபாரிகளுக்கும், திருநெல்வேலி நகர வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. 

இந் நிலையில் திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் மரக்கறிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்து திரும்பிக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வாங்கிக் குடித்தவாறே இந்தக் கஞ்சிக்கு உப்பு இல்லை எனக் கூறிச் சலித்துக் கொண்டார்.

இதனையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிப் பரிமாறலில் மும்முரமாக ஈடுபட்டிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கிருபா கிரிதரனும், கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரனும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி உருவான வரலாறு தொடர்பில் குறித்த பெண்ணுக்கு ஒப்புவித்தனர். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உண்ண உணவின்றித் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் உயிர்காத்த கஞ்சி முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பதை அந்தப் பெண் புரியும்படி எடுத்துரைத்தனர். 

அவர்கள் கூறியதை மேற்படி பெண்ணும் ஏற்றுக் கொண்டு உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பருகிச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.