யாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற புரட்சிகர மேதினப் பேரணியும் பொதுக் கூட்டமும்

சர்வதேசத் தொழிலாளர்களின் போராட்டத் தினமான மேதினத்தை முன்னிட்டுப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் 'ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்க்கும் புரட்சிகர மேதினம்' எனும் தொனிப் பொருளிலான மேதினப் பேரணியும் பொதுக் கூட்டமும் நேற்றுத் திங்கட்கிழமை(01.05.2023) யாழ்ப்பாணத்தில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

கல்வியங்காட்டுச் சந்தைக்கு அருகிலிருந்து நேற்று மாலை-04.30 மணியளவில் மேதினப் பேரணி ஆரம்பமானது. இந்தப் பேரணி பருத்தித்துறை வீதி வழியாக நல்லூர் முத்திரைச் சந்தியை அடைந்து செம்மணி வீதி வழியாக மாலை-05 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவைச் சென்றடைந்தது.


குறித்த பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்கள் ரணில் ராஜபக்ச ஆட்சியே உழைக்கும் மக்களை வதைக்காதே!, அடிக்காதே! அடிக்காதே! விவசாயி, மீனவர் வயிற்றில் அடிக்காதே!, விலை ஏற்றம் நூறு ரூபா விலை இறக்கம் இரண்டு ரூபா ஏமாற்றுக் கணக்கை மக்களிடம் விடாதே!, மருந்துத் தட்டுப்பாட்டை உடன் நிறுத்து, மின்சாரக் கட்டணத்தை உடன் குறை, வரி விதிப்புக்களைத் திணிக்காதே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உடன் கைவிடு, தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.                                    

தொடர்ந்து நல்லூர் சங்கிலியன் பூங்காவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வடபிராந்தியச் செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் மேதினப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.


மேதினப் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த பொதுவுடமைவாதியுமான சி.கா.செந்திவேல், கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன், கட்சியின் தலைமைக் குழுவைச் சேர்ந்த சட்டத்தரணி சோ. தேவராஜா, கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளர் நி.பிரதீபன், எழுத்தாளர் க.தணிகாசலம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர்கள், புதிய ஜனநாயக இளைஞர் அணி, விவசாய முன்னணி,  பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)