நீதிமன்றத்தில் பொல்லுக் கொடுத்து அடி வாங்கிய பொலிஸார்: சுகாஷ் சாட்டையடி!

நீதிமன்றத்தில் பொய் வழக்கினைத் தொடுத்துப் பொல்லுக் கொடுத்துப் பொலிஸார் இன்று அடி வாங்கியுள்ளனர் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார். எத்தகைய அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் நாங்கள் அடக்குமுறைகளுக்கு அஞ்சப் போவது கிடையாது எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று புதன்கிழமை(07.06.2023) காலை கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டுக் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார். 

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குப் பொலிஸார் எழுத்துமூலம் வழங்கிய அறிக்கையில் 08 ஆம் திகதி காலை வாக்குமூலம் பெறுவதற்காக வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு 07 ஆம் திகதி பொலிஸார் கைது செய்திருக்கிறார்கள். இதிலிருந்தே பொலிஸாரின் கைது ஒரு சட்டவிரோதம் என்பது தெளிவாகியிருக்கிறது. இதனை நாங்கள் நீதிமன்றத்தில் எடுத்து வாதிட்டிருந்தோம்.

எனவே, பொலிஸாரின் பொய்வழக்கு முதல் தவணையிலேயே பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொய் வழக்குகளுக்கு எதிராக நாங்கள் எங்கள் ஆட்சேபனைகளைப் பலமாகத் தெரிவிப்போம்.

உண்மையில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைப் பழிவாங்குவதற்கே. அத்தகைய மோசடியான வழக்கை முதல் சந்திப்பிலேயே நாங்கள் பொய்யென நிரூபித்துள்ளோம். 

இந்த வழக்கில் பொலிஸாருக்கு மேலும் பல பாடங்களை நாங்கள் புகட்டுவோம் எனவும் அவர் மேலும் காட்டமாகத் தெரிவித்தார்.