வடக்கிலும் கறுவா மூலம் இலாபமீட்டலாம் - யாழ். செயலமர்வில் தகவல்

 


இலங்கையின் வடமாகாணத்தில் கறுவா செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்று மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கல்லூரியின் விவசாய நிறுவனத்தில் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.


இலங்கைக்கே உரிய தாவரமான கறுவா இதுவரை மத்திய, தென்பகுதிகளில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்தது. இப்போது தான் வடபகுதிகளில் கறுவா செய்கை மேற்கொள்வதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.  இலங்கை கறுவாவுக்கு சர்வதேச சந்தையில் நல்ல கிராக்கி இருப்பதாகவும் தெரிவித்த கறுவா ஆராய்ச்சி நிலைய பணிப்பாளரான கலாநிதி ஜெயசிங்க கறுவா செய்கை தொடர்பிலான பல்வேறு விளக்கங்களையும் அளித்தார்.


வடபகுதியில் கறுவா செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என சில ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இங்கே கறுவா செய்கையை ஊக்குவிக்க முன்வந்திருப்பதாகவும், குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி தரிசு நிலங்களிலும் வளர்க்கக் கூடியதாக இருக்கும் பணப்பயிராக கறுவா விளங்குவதாகவும், இதனை சிறிய அளவில் தோட்டமாகவும் பெருமளவு நிலப்பரப்பில் கூட வளர்க்க முடியும். கறுவா பயன்தர இரண்டரை வருடங்கள் ஆகும். 60 இலிருந்து 100 ஆண்டுகள் வரை பல தலைமுறைகளாக பயன்தரும் எனவும், இங்கே விவசாயக் கல்லூரி மாணவர்களையும் ஊக்குவிப்பதன் ஊடாக அவர்கள் பொதுமக்கள் மத்தியில் கறுவா செய்கை தொடர்பிலான விழிப்புணர்வை எதிர்காலத்தில் ஏற்படுத்துவார்கள் என இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர் புவனகுமாா் தெரிவித்தார்.

கறுவா கன்றுகளை உற்பத்தி செய்து இருமடங்கு இலாபம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும்,

கறுவா பட்டையிலிருந்து பெறுமதி சோ் உற்பத்திகள் பலவற்றையும் மேற்கொண்டு அதனை ஏற்றுமதி செய்து நல்ல இலாபம் பெற முடியும் எனவும் செயலமர்வில் தெரிவிக்கப்பட்டது.

கறுவா கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு எவ்வாறு கூட்டெரு தயாரித்து பொலித்தீன் பைகளில் இடப்பட்டு கறுவா விதைகள் இடப்பட வேண்டும் என செயல்முறை ரீதியாக செய்து காண்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கறுவா பட்டையில் இருந்து கறுவாவை எவ்வாறு பிரித்தெடுப்பது, பின்னர் அதனை உலர விடப்படவேண்டிய முறை குறித்தும்  நேரடியாக செய்முறை ரீதியாக தெளிவுபடுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் யாழ்ப்பாண கல்லூரி விவசாய நிறுவன மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது கறுவா செய்கை தொடர்பிலான பல்வேறு சந்தேகங்களுக்கு விடைகளைப் பெற்றுக் கொண்டனர்.


கடந்த மாதம் வட்டுக்கோட்டையிலும், பின்னர் வடமாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் கறுவா தொடர்பிலான செயலமா்வில் பலரும் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.