மருதங்கேணி விவகாரம்: முன்னணியின் மேலும் மூன்று முக்கியஸ்தர்கள் விசாரணைகளுக்கு அழைப்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் பொது விளையாட்டுக் கழகமொன்றில் கடந்த-02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், கட்சியின்  மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கிருபா கிரிதரன் ஆகிய மூவரையும் இன்று புதன்கிழமை(14.06.2023) காலை-10 மணியளவில் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கிளிநொச்சி மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரியால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் வேறொரு வழக்கொன்றில் இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இந் நிலையில் நாளை வியாழக்கிழமை(15.06.2023) மூவரும் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுவதாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். 

இதேவேளை, குறித்த மூவரையும் விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கைது செய்யக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.