வடக்கில் வணிக வாய்ப்புக்களை மேம்படுத்தும் வகையில் வடக்கிற்கான கைத்தொழில்துறைகள் மன்றம் CDC Events நிறுவனம் மற்றும் யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து நடாத்தும் வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி-2023 எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்-11 ஆம், 12 ஆம், 13 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலைய வளாகத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தக் கண்காட்சியில் மொத்தமாக 200 வரையான கண்காட்சிக் கூடங்கள் இடம்பெறவிருப்பதாகவும், வடக்கின் தொழில் முயற்சியாளர்களுக்கு 36 கண்காட்சிக் கூடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் துணைத் தலைவர் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி-2023 தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை(22.06.2023) மாலை-04.30 மணியளவில் யாழ்.கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய வர்த்தகத் தொடர்புகள் மற்றும் எதிர்கால வர்த்தக வாய்ப்புக்களை கட்டியெழுப்பும் முயற்சியாகவும், வடக்கில் வர்த்தகக் கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி தென்னிலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழில் இயந்திர சாதனங்களை வடிவமைக்கின்ற, உற்பத்தி செய்கின்ற கம்பனிகளையும், தொழில் வல்லுநர்களையும், வர்த்தகர்களையும் இணைக்கின்ற ஒரு சங்கமமாகவும் காணப்படுகின்றது.
அத்துடன் வடக்கின் சிறிய, நடுத்தரக் கைத்தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் தளமாகவும், வடக்கின் வணிக வாய்ப்புக்களை மேம்படுத்தும் களமாகவும் அமையவுள்ளது.
குறித்த கண்காட்சி பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் இடம்பெறுவதால் பங்கேற்பாளர்களுக்கு அதிவேக வர்த்தகத் தொடர்புகளும், வணிக வாய்ப்புக்களும் கிடைக்கவுள்ளது. இதன்மூலம் தொழில்துறை உற்பத்திக்கான உட்கட்டமைப்பு முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது வரை வடக்கின் முன்னேற்றம் மேம்படும் வாய்ப்புக் கிட்டும்.
இந்தக் கண்காட்சியில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கணிசமான விலைக் கழிவில் கண்காட்சிக் கூடங்களை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
வடக்கிற்கான கைத்தொழில்துறைகள் மன்றம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பல்வேறு சேவைகளை ஆற்றிவரும் நிலையில் வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை முதல் தடவையாக யாழில் ஏற்பாடு செய்து நடாத்தவுள்ளது. நாம் எதிர்வரும் காலங்களிலும் வருடம் தோறும் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்து நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
யுத்தத்திற்குப் பின்னர் வடமாகாணத்தில் 80, 000 விதவைகள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, விதவைகள் தொடர்பில் கரிசனை கொண்டு அடிப்படை வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றத்தின் தலைவர் கே.பூரணச்சந்திரன், மேற்படி மன்றத்தின் பணிப்பாளர்களான நாகேஷ் உருத்திரமூர்த்தி(மன்னார்) , எஸ்.பிரதீபன்(முல்லைத்தீவு), தொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(செ.ரவிசாந்)