நாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் மக்களின் பங்கேற்பு போதாது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் செல்வாக்கில்லை என்று கூறி எமது போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் கோணத்தில் செயற்படும் தமிழ்த்தரப்புக்கள் உண்மையில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் செயற்பட்டிருக்கிறார்களா? மாறாகப் படுமோசமான வகையில் தமிழ்மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் சரியான கோணத்தில் தான் செயற்படுகிறது மாயைக்குள் தள்ளும் வகையில் தான் அவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளன எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(16.06.2023) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நீங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றமையால் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்க முடியவில்லையென விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இதுதொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன? ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் போராட்டத்தில் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டுமென்று தான் நாங்கள் விரும்புகின்றோம். அதற்கான கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்தும் விடுத்து வருகின்றோம்.
எனினும், அரசு மக்கள் ஒன்றிணையாமல் தடுப்பதற்கும், அவர்களைத் தொடர்ந்தும் பயபீதியுடன் இருப்பதற்கும் உரிய வேலைகளைச் செய்து வருகிறது. தற்போது குறித்த விடயம் தெளிவாக நிரூபணமாகியிருக்கிறது அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
(செ.ரவிசாந்)