தமிழ் அரசியல் கைதிகள் படுகொலையின் 40 ஆவது வருட நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் அனுஷ்டிப்பு


 கொழும்பு வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட 40 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை (25,07.2023) நண்பகல்-12 மணியளவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.  


இதன்போது சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கும், 1983 ஜீலை மாதம் இனப் படுகொலை செய்யப்பட்ட 3000 இற்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கும், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிவாஜிலிங்கம் நினைவுரை நிகழ்த்தினார்.

இதேவேளை, 1983 ஜீலை மாதத்தில் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை வன்முறையின் உச்சக்கட்டமாக குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன், தேவன் உள்ளிட்ட தளபதிகள் உட்பட மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையான வெலிக்கடைச் சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். எனினும், குறித்த படுகொலை தொடர்பில் இதுவரை எவரும் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.