வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக பண்பாட்டுப் பேரவையின் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா இன்று வியாழக்கிழமை (27.07.2023) பிற்பகல்-02 மணியளவில் நெல்லியடி முருகன் திருமண மண்டபத்தில் கரவெட்டிப் பிரதேச செயலர் ஈ.தயாரூபன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
மேற்படி விழாவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் சிறப்பு விருந்தினராகவும், பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் நி.லாகினி மற்றும் மூத்த கலைஞர் கலாபூஷணம் க.விஜயரத்தினம் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மறைந்த முதுபெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் பெயரில் அமைந்த அரங்கின் திறப்புரையைக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமாரும், ‘திருவுடையாள்’ மலர் ஆய்வுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி தி.செல்வமனோகரனும் நிகழ்த்துவர்.
விழாவில் பிரதேசக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கலும், பாடசாலை மாணவர்கள், பிரதேசக் கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.