யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை(27.07.2023) காலை மேற்படி கல்லூரியின் அதிபர் க.கிருஷ்ணகுமார் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமானது.
இன்று ஆரம்பமான நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமையும்(28.07.2023), நாளை மறுதினம் சனிக்கிழமையும்(29.07.2023) வெகுசிறப்பாக இடம்பெறவுள்ளன.
நூற்றாண்டு விழாவின் முதலாம் நாள் நிகழ்வாக மாணவ- மாணவியர் மற்றும் பழைய மாணவர்களின் விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி, வாகன ஊர்திகளின் பேரணி இன்று காலை-08.30 மணியளவில் மேற்படி கல்லூரியிலிருந்து ஆரம்பமானது.
குறித்த விழிப்புணர்வுப் பேரணி நெல்லியடி நகர் ஊடாக கரவெட்டி மூத்த விநாயகர் ஆலயம் வரை சென்று அங்கிருந்து சோனப்பு வீதி ஊடாக மண்டான் அடைந்து உடுப்பிட்டி வீதி ஊடாக மாலிசந்தி- மந்திகை ஊடாக மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்து அங்கு நூற்றாண்டு நினைவுத் தபாலுறை வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
அத்துடன் இப் பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுப் பயன்தரு பனைமரக் கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.